சினிமா செய்திகள்
கமல்ஹாசன் ஜோடியாக நடித்தவர்நடிகை ரிதா பாதுரி திடீர் மரணம்

பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பு பிரச்சினையும் இருந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் உடல் நிலை மோசமானது. நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. 

கமல்ஹாசன் மலையாளத்தில் கதாநாயகனாக அறிமுகமான படம் கன்னியாகுமரி. சேதுமாதவன் இயக்கி 1974–ல் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக ரிதா பாதுரி நடித்து இருந்தார். மேலும் 1970–களில் வெளியான ராஜா, ஜூலி, தில்வில் பியார், வியார் உள்பட 70 படங்களில் நடித்து இருக்கிறார். சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். 

அதன்பிறகு அக்காள், அண்ணி கதாபாத்திரங்களில் துணை நடிகையாக வந்தார். ஹபி ஹான் ஹபி நா, கியா ஹேக்னா, தில் வில் பியார் வியா ஆகியவை இவர் நடிப்பில் வந்த முக்கிய படங்கள். குஜராத்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இந்தி தொடர்களில் நடித்து வந்தார். 

மரணம் அடைந்த ரிதா பாதுரி உடல் மும்பை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்தி நடிகர்–நடிகைகள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். சின்னத்திரை நடிகர்–நடிகைகளும் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை இறுதி சடங்கு நடந்தது.