சர்ச்சைகளில் நடிகர் வடிவேலு

சமீப காலங்களில் நடிகர் வடிவேலுவின் பெயர் சர்ச்சைகளில் அடிபடுகிறது.

Update: 2018-07-17 23:30 GMT
அசாத்திய நகைச்சுவை திறமையால் தமிழ் பட உலகை கலக்கியவர் வடிவேலு. 1991–ல் என் ராசாவின் மனசிலே படத்தில் அறிமுகமாகி 25 ஆண்டுகளாக கொடி கட்டி பறந்தார். பெரிய கதாநாயகர்களே இவரது கால்ஷீட்டுக்கு காத்திருந்த காலம் இருந்தது. ஒரு நாள் சம்பளமாக ரூ.10 லட்சம்வரை வாங்கியதாகவும், மாதத்தில் அவர் சம்பாதித்த தொகை முன்னணி கதாநாயகர்களை விட அதிகம் என்றும் பேச்சு இருந்தது.  இப்போதும் இரவுகளில் வீடுகள் தோறும் அவரது காமெடியை டி.வி.யில் பார்த்த சிரிப்பு சத்தங்கள்தான் கேட்கின்றன. கதாநாயகனாகவும் தன்னை நிலைநிறுத்தினார். இம்சை அரசன் 23–ம் புலிகேசி வசூல் சாதனை நிகழ்த்தியது. போடா போடா புண்ணாக்கு, எட்டணா இருந்தா, வாடி பொட்ட புள்ள வெளியே என்று பாடகராகவும் அடையாளப்படுத்தினார். 

அப்படிப்பட்ட வடிவேலுக்கு சமீப காலங்களாக தொடர்ந்து சர்ச்சைகள். அதோடு படங்களும் இல்லை. சொத்து பிரச்சினையில் கோர்ட்டுக்கு அலைந்தார். இம்சை அரசன் 23–ம் புலிகேசி இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் இயக்குனர் சிம்புத்தேவனுக்கும், வடிவேலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு படத்தையே முடக்கி போட்டுள்ளது. 

இதனால் பல கோடி செலவில் போட்ட அரங்குகளை பிரித்துள்ளனர். ரூ.9 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ‌ஷங்கர் கணக்கு சொல்கிறார். தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்ட சமரச முயற்சிகளும் எடுபடவில்லை என்கின்றனர். இப்போது அவரை கதாநாயகனாக வைத்து ‘எலி’ படத்தை தயாரித்த சதீஷ்குமாரும் நஷ்டத்தால் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் சிக்கலில் மாட்டி இருக்கிறார். பிரச்சினை போலீசுக்கு சென்றுள்ளது.

மேலும் செய்திகள்