சினிமா செய்திகள்
‘‘பாலியல் தொல்லையில் சிக்கிய 6 கதாநாயகிகள்’’ –நடிகை ஸ்ரீரெட்டி

பாலியல் தொல்லையில் சிக்கிய 6 கதாநாயகிகள் பற்றிய தகவல்களை நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு பட உலகில் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி படுக்கையை பகிர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை டுவிட்டரில் அம்பலபடுத்தினார். இப்போது தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்த், லாரன்ஸ், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி ஆகியோர் பெயரையும் சர்ச்சையில் இழுத்து இருக்கிறார். 

இதனால் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் புகார் கூறினார். இந்த நிலையில் சென்னை வந்த ஸ்ரீரெட்டி பாலியல் தொல்லைகள் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:–

‘‘சில நாட்கள் சென்னையில் தங்கி இருந்து இங்குள்ள திரையுலகினரால் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை வெளியிடுவேன். தெலுங்கு திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறியதால் எனக்கு பட வாய்ப்புகள் இல்லை. வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். நண்பர்கள் உதவுகிறார்கள். எவ்வளவு மிரட்டல்கள் வந்தாலும் பயப்படமாட்டேன். 

அனைத்து நடிகைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கவே போராடுகிறேன். குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மனசாட்சிக்கு தெரியும். அவர்களை கடவுள் தண்டிப்பார். பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றிய சிறிய பட்டியல்தான் என்னிடம் உள்ளது. 

மேலும் 6 முன்னணி கதாநாயகிகளிடம் பெரிய பட்டியல் இருக்கிறது. அதை அவர்கள் வெளியிட்டால் பரபரப்பாகி விடும். விஷாலை நான் தவறாக பேசி இருந்தால் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நடிகைகளை பாதுகாக்கும் இடத்தில் விஷால் இருக்கிறார். அவரால்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.’’

இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார்.