சினிமா செய்திகள்
‘‘பார்த்ததும் வருவது காதல் இல்லை’’ –நடிகை கேத்தரின் தெரெசா

பார்த்ததும் வருவது காதல் இல்லை என்று நடிகை கேத்தரின் தெரெசா கூறியுள்ளார்.
கார்த்தி ஜோடியாக மெட்ராஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் கேத்தரின் தெரெசா. கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு–2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:–

‘‘தமிழ் படங்களில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்தன. சில படங்களில் கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் அதுவும் பெருமையாகவே இருந்தது. எனக்கு நடனம் தெரியும். சிறுவயதில் இருந்தே நடனம் கற்று இருக்கிறேன். அதனால் படங்களில் சிறப்பாக ஆட முடிகிறது. எனது நடனம் நன்றாக இருப்பதாக பாராட்டுகளும் கிடைக்கின்றன. 

தமிழில் அதிக பட வாய்ப்புகள் வருவதால் தமிழ் கற்று வருகிறேன். காதல் பற்றி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்து இருக்கிறது. பார்த்ததும் வருவது காதல் இல்லை. ஒருவரை பார்க்கும்போது வாழ்நாள் முழுவதும் இவருடன் வாழ வேண்டும் என்ற உணர்வு வரவேண்டும். வாழ்க்கைக்கு துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையும் ஏற்பட வேண்டும். அதுதான் காதல். அந்த காதல்தான் நிலைக்கும். 

கண்டதும் பிறக்கும் காதல் எல்லாம் பாதியிலேயே அறுந்து விடும். எனக்கு யார் மீதும் இதுவரை காதல் வரவில்லை. ஆனாலும் என்னை நிறைய பேர் காதலிப்பதாக சொல்லி அணுகினார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பி விட்டேன். ஐந்து வருடம் கழித்தே திருமணம் செய்து கொள்வேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளியே செல்லாமல் வீட்டில் இருக்கத்தான் எனக்கு பிடிக்கும்.’’

இவ்வாறு கேத்தரின் தெரெசா கூறினார்.