விளம்பர படத்துக்கு வங்கி அதிகாரிகள் எதிர்ப்பு சர்ச்சையில் அமிதாப்பச்சன்

அமிதாப்பச்சனும் அவரது மகள் சுவேதாவும் நடித்த விளம்பர படத்துக்கு இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

Update: 2018-07-19 22:45 GMT
அமிதாப்பச்சனும் அவரது மகள் சுவேதாவும் இணைந்து விளம்பர படமொன்றில் நடித்துள்ளனர். மகளுடன் நடித்த முதல் படம் என்பதால் இதற்கு பெரிய வரவேற்பு இருந்தது. அமிதாப்பச்சனும் மகளுடன் நடித்ததை பெருமையாக பேசி வந்தார். இந்த விளம்பரத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. 

விளம்பர படத்தில் அமிதாப்பச்சன் மகளுடன் வங்கி ஒன்றுக்கு சென்று பென்‌ஷன் தொடர்பாக பேச முற்படுகிறார். உடனே வங்கி ஊழியர் எரிச்சல்பட்டு பாஸ்புக்கை தள்ளிவிடுகிறார். பிறகு ஒவ்வொரு கவுண்ட்டராக சென்றும் அவருக்கு அதே அனுபவம் ஏற்படுகிறது. இறுதியாக மகளுடன் வங்கி மேலாளரை சந்திக்கிறார் அமிதாப்பச்சன். 

தனக்கு ஒரு மாதத்தில் இரண்டு முறை பென்‌ஷன் ‘கிரடிட்’ ஆகிவிட்டது என்று கூறுகிறார். அதை கேட்டதும் மேலாளர் இதற்கு நீங்கள் விருந்துதான் வைக்க வேண்டும் என்கிறார். ஆனால் இப்படி ஏமாற்றி பணம் சேர்ப்பது எனது கொள்கைக்கு விரோதமானது என்கிறார் அமிதாப்பச்சன். அதை கேட்டதும் அதிர்ச்சியாகிறார் மேலாளர். இப்படி ஒன்றரை நிமிடம் அந்த விளம்பரம் ஓடுகிறது. 

இந்த காட்சியைத்தான் வங்கி ஊழியர்கள் எதிர்த்து உள்ளனர். இதுகுறித்து அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சவும்யா தத்தா கூறும்போது, ‘‘ஏற்கனவே வங்கிகள் மீது பல்வேறு காரணங்களால் மக்களுக்கு தவறான எண்ணம் உள்ளது. இந்த விளம்பரம் மேலும் கெட்டபெயரை ஏற்படுத்துவதுபோல் இருக்கிறது. வாடிக்கையாளர் சேவைதான் எங்கள் முதல் நோக்கம்’’ என்றார். விளம்பரத்தை நீக்காவிட்டால் வழக்கு தொடருவோம். போராட்டம் நடத்துவோம் என்றும் கூறியுள்ளார். இந்த சங்கத்தில் 3.2 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்