சினிமா செய்திகள்
ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?நடிகர் சங்கம் ஆலோசனை

நடிகை ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி இப்போது சென்னையில் முகாமிட்டு தமிழ் பட உலகினர் மீது குற்றம் சாட்டி வருகிறார். நடிகர்கள் லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி ஆகியோர் இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளனர். 

ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அவர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு நடிகர் நானி தன்மீது பாலியல் புகார் கூறியதற்காக ஸ்ரீரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டிக்கு நடிக்க தடை விதித்து பிறகு அதை வாபஸ் பெற்றுவிட்டது. 

ஆனாலும் தெலுங்கு பட உலகினர் அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யாமல் ஒதுக்குகிறார்கள். ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார்கள் இப்போது தமிழ் பட உலகினருக்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. விஷாலிடம் இருந்து மிரட்டல்கள் வருகின்றன என்றும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். 

நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கூறும்போது, ‘‘நடிகை ஸ்ரீரெட்டி ஆதாரமின்றி குற்றம் சாட்டி வருகிறார். ஆதாரம் இல்லாமல் கூறும் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஸ்ரீரெட்டி மீது நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். 

சில உறுப்பினர்கள் அவர் மீது புகார் அளிக்க தயாராகி வருவதாகவும், அதை வைத்து ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நடிகர் சங்கம் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.