சினிமா செய்திகள்
‘‘திருமணம் எப்போது?’’ –காஜல் அகர்வால்

திருமணத்துக்கு தயாராகும்போது நிருபர்களை அழைத்து வெளிப்படையாக அறிவிப்பேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறினார்.
நடிகை காஜல் அகர்வால் தனது தந்தையுடன் தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் ஆயிரம் தூண்களுடன் கட்டப்பட்டு உள்ள புகழ் பெற்ற சிவன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். அப்போது நிருபர்கள் அவரை சந்தித்து திருமணம், நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து காஜல் அகர்வால் கூறியதாவது:–

‘‘வாரங்கல்லில் உள்ள ஆயிரம்கால் சிவன் கோவில் விசே‌ஷமானது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அதனால் இங்கு சாமி கும்பிட வந்தேன். இந்த கோவில் மிகவும் பிடித்து இருக்கிறது. என்னை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களிடம் இந்த கோவிலில் படப்பிடிப்பு நடத்தும்படி வற்புறுத்துவேன். 

எனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. திருமணத்துக்கு தயாராகும்போது நிருபர்களை அழைத்து வெளிப்படையாக அறிவிப்பேன். காதல் திருமணம் செய்து கொள்வேனா? அல்லது பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேனா? என்பது குறித்து எதுவும் சொல்ல முடியாது.  சினிமாவில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. எனக்கு அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. பெண்கள் தைரியமாக இருந்தால் பிரச்சினைகளோ, கஷ்டங்களோ வராது. ஆண்களும் பொறுப்போடு இருந்தால் எல்லோருக்கும் நல்லது. நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை கேள்விப்பட்டு மிகவும் கலங்கினேன். எனது தாத்தாவையும் இதே நோய் தாக்கியது. புற்று நோயால் பாதித்தவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளேன்.’’

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.