சினிமா செய்திகள்
பாலியல் குற்றங்களை தடுக்க‘‘சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி அவசியம்’’பட விழாவில் டைரக்டர் யுரேகா பேச்சு

பாலியல் குற்றங்களை தடுக்க சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி அவசியம் என்று டைரக்டர் யுரேகா பேசினார்.
மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களை டைரக்டு செய்த யுரேகா புதிதாக இயக்கி உள்ள படம் ‘காட்டுப்பய சார் இந்த காளி’. இதில் ஜெய்வந்த் கதாநாயகனாவும், ஐரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் டைரக்டர் யுரேகா பேசியதாவது:–

‘‘தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன, ஆசிபாவுக்கு கொடுமை நேர்ந்தது. அயனாவரம் சிறுமியை சீரழித்துள்ளனர். சிறுசேரியில் வட நாட்டை சேர்ந்தவர்கள் நடத்திய வன்கொடுமை உலுக்கியது. பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டுமானால் சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி அவசியம்.

சென்னை பாரீஸை போல் சர்வதேச நகரமாக மாறி இருக்கிறது. வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வருகிறார்கள். வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள். பெரிய நகரங்களான மும்பையிலும், கொல்கத்தாவிலும் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ளன. அங்கு 500 ரூபாய் சம்பாதித்தால் 100 ரூபாயை மதுவிலும், 100 ரூபாயை சிவப்பு விளக்கு பகுதியிலும் செலவழித்து விட்டு மீதி தொகையுடன் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள். இதனால் குற்றங்கள் நடப்பது இல்லை. 

சென்னையில் சிவப்பு விளக்கு பகுதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று 1992–ம் ஆண்டிலேயே பாலியல் சம்பந்தமான டாக்டர் ஒருவர் தமிழக அரசுக்கு மனு கொடுத்து இருக்கிறார். அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். பல தரப்பு மக்கள் வருகிற இடமாக இருப்பதால் சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி அமைக்க வேண்டும். 

வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் சென்னைக்கு வந்து தமிழர்களுக்கு வாகனங்கள் வாங்க கடன் கொடுத்தும், வேலை வாய்ப்புகளை பெற்றும் இங்கு வசிப்பவர்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். இதையெல்லாம் காட்டுப்பய சார் இந்த காளி படத்தில் காட்சிப்படுத்தி உள்ளேன்.’’

இவ்வாறு அவர் பேசினார்.