சினிமா செய்திகள்
கார்த்தி படத்தை பாராட்டிய வெங்கையா நாயுடுக்கு நன்றி சொன்ன சூர்யா

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து உள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். தெலுங்கிலும் இந்த படத்தை ‘சின்னபாபு’ என்ற பெயரில் வெளியிட்டு உள்ளனர். கார்த்தி விவசாயியாக நடித்து இருக்கிறார். குடும்ப உறவுகளின் மகத்துவத்தை மையமாக வைத்து தயாரான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. 

இந்த படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பார்த்து டுவிட்டரில் பாராட்டி உள்ளார். ‘‘சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘சின்னபாபு’ படத்தை பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில் நம் பழக்க வழக்கங்களை மரபுகளை மற்றும் வாழ்க்கை முறைகளை ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவராஸ்யமான படம்’’ என்று அவர் கூறியிருந்தார். 

இதற்காக வெங்கையா நாயுடுக்கு சூர்யா நன்றி தெரிவித்து உள்ளார். ‘‘நாட்டின் மிகப்பெரிய தலைவரான நீங்கள் படத்தை பார்த்து பாராட்டியது மகிழ்ச்சியை தந்தது’’ என்று அவர் கூறியுள்ளார். நடிகர் கார்த்தியும் வெங்கையா நாயுடுவுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.