சினிமா செய்திகள்
நடிகைகள் வழிகாட்டும் கல்லூரி வாழ்க்கை

கல்லூரி கால கவிதையான நினைவுகளை எவராலும் மறக்க முடியாது. பிரபல நடிகைகளுக்கும் இது பொருந்தும்.
பிரபல இந்தி நடிகைகள் தங்கள் கல்லூரி காலம் பற்றிப் பேசுகிறார்கள்!

ரிச்சா சதா:

எனது கல்லூரி காலம் வேடிக்கையும் விளையாட்டுமாக இருந்தது. அப்போது நான் கல்லூரிக்கு வெளியிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தேன். காரணம் நான் நாடகங்களில் நடிக்கத் தொடங்கியிருந்தேன், நடனத்திலும், மாடலிங்கிலும்கூட ஈடுபட ஆரம்பித் திருந்தேன். ஆனால், கிடைக்கும் நேரத்தையெல்லாம் நண்பர்களுடன் கழிப்பது எனக்குப் பிடிக்கும். தற்போது நாங்கள் எல்லோரும் உலகின் பல்வேறு பாகங்களுக்குச் சிதறிவிட்டோம். ஆனால் இப்போதும் நாங்கள் சந்திக்கும்போது அன்றைக்கும் இன்றைக்கும் எந்த மாற்றமும் இல்லை. தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளே, ஜாலியாக இருங்கள். அதேநேரத்தில் படிப்பிலும் கவனம் செலுத்துங்கள்.

மல்லிகா ஷெராவத்:

நான் படித்த கல்லூரிக்கு வெளியே கிடைத்த ‘சாட்’ வகைகளின் ருசி இன்றும் நெஞ்சில் நிற்கிறது. நாட்டிலேயே சிறந்த ‘சாட்’ வகைகள் அவைதான் என்று அடித்துக் கூறுவேன். புதிதாக கல்லூரி செல்வோருக்கு நான் சொல்லும் அறிவுரை, உங்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை நீங்கள் தொடங்கு கிறீர்கள். அதை வெற்றிகரமாக முடித்திடுங்கள். அதேநேரம், வெற்றி என்ன என்பது குறித்து சமூகம் வரை யறுத்து வைத்திருப்பதை நீங்கள் அப்படியே ஏற்கத் தேவையில்லை. நீங்கள் கனவு காணும் விஷயங்களை எல்லாம் செய்யுங்கள். நிறைய பயணம் செய்யுங்கள், பணக்காரர் ஆகுங்கள், புகழடையுங்கள், புதிய விஷயங் களைக் கண்டுபிடியுங்கள், தலைமை தாங் குங்கள், அனைவர் மீதும் அன்பு செலுத் துங்கள். எல்லாவிதத்திலும் சிறந்த வராக, தைரிய மானவராக, துணிகரமா னவராக இருங்கள்.

மினிஷா லம்பா:

கல்லூரி காலத்தில், ஒரே லூட்டியும் அரட்டை யுமாக கல்லூரி பஸ்சில் சென்று வந்ததை மறக்க முடியாது. அதேநேரம் பஸ்சை தவறவிட்டால், கல்லூரிக்குப் போவதே கஷ்டமாகிவிடும். இன்றைய கல்லூரி மாணவ, மாணவியருக்கு நான் சொல்லும் அறிவுரை, கல்லூரிக்கு ‘கட்’ அடிக்காதீர்கள். அந்த நாட்கள்தான் என்றென் றும் உங்கள் நினைவில் இனித்திருக்கும்.

நிம்ரத் கவுர்:

கல்லூரி காலம் என்றாலே எனக்கு சாப்பாட்டு விஷயங்கள்தான் ஞாபகத்துக்கு வரும். எங்கள் கல்லூரி கால்பந்து மைதானத்துக்கு அருகில் ஒரு சிறு கடை இருந்தது. அதை நடத்திய இர்பான் தாத்தா கொடுக்கும் ‘மேகி’யைப் போன்ற சுவையான மேகியை வேறு எங்கும் சாப்பிட்டதில்லை. வகுப்புகளுக்கு இடையே நாங்கள் அங்கே ஓடிவிடுவோம். அந்த தாத்தா கடையில் ருசித்த விஷயங்கள் அப்படியே நினைவில் நிலைத்திருக்கின்றன. நான் படித்த அதே கல்லூரிக்கு, பின்னர் சிறப்பு விருந்தினராகச் சென்றது பெருமைக்குரிய விஷயம். அப்போது நான் இர்பான் தாத்தா கடைக்கும் சென்றிருந்தேன். அங்கு கொஞ்ச நேரம் அமர்ந் திருந்த நான், சில தின்பண்டங்களைச் சாப்பிட்டேன்.

கல்லூரியில் இருந்து வெளியே காலடி வைக்கும்போது, நாம் அவ்வளவாக பக்குவப்பட்டிருக்க மாட்டோம், அதற்கு யாரும் நம்மைத் தயார்படுத்தி இருக்க மாட்டார்கள். கண் ணைக் கட்டி காட்டில் விட்டது போலத்தான் இருக்கும். நீங்களாக தட்டுத் தடுமாறித்தான் தயாராக வேண்டும். அப்போதும் நாம் திரும்பித் திரும்பி பின்னால் பார்த்துக்கொண்டு நிற்க முடியாது. நாம் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், கஷ்டங்கள் நம்மை முடக்கிப் போட்டுவிட அனுமதிக்கக் கூடாது. கல்லூரியில் இருந்து வெளியே வரும்போது பொருள் சார்ந்த விஷயங்கள் பெரிதாகத் தோன்றும். ஆனால் அவையெல்லாம் முக்கியமில்லை என்பதை ஒருகட்டத்தில் உணர்வோம். மாணவ, மாணவியருக்கு நான் சொல்லும் இன்னொரு முக்கியமான விஷயம், வாழ்க்கையில் உடனடி வெற்றிக்காக குறுக்குவழிகளை எப்போதும் நாடாதீர்கள்.

இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா:

கல்லூரி காலத்தில்தான் என் வாழ்வின் அடித்தளம் உருவானது. படிப்பு, விளையாட்டு, அரசியல் ஆர்வம், இன்னபிற விஷயங்கள் என்று மிகவும் சுறுசுறுப்பான சூழல் அது. வாழ்வில் நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தது அப்போதுதான். மாணவர்கள் பட்டம் பெற்றதுமே, வாழ்க்கையில் இறங்க வேண்டும் என்று வேகம் காட்டுவது இயல்பு. ஆனால் அவ்வளவு துரிதம் தேவையில்லை என்பேன் நான். வெளிநாடுகளுக்குச் செல்லுங்கள், நிறைய மனிதர்களைச் சந்தியுங்கள், உங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கல்விப் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் நீங்கள், வாழ்க்கைப் பல்கலைக்கழகத்தில் அடியெடுத்து வைப்பீர்கள். அது முக்கியமானது. அதற்கு நீங்கள் உங்களை நல்லவிதத்தில் தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.