சினிமா செய்திகள்
3 கார்களில் சொகுசு காரை மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் கைது

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் பி.எம்.டபிள்யூ சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை மீறி வேகமாக சென்றது. அதை பார்த்து சாலையில் சென்றவர்கள் தெறித்து ஓடினார்கள்.
பின்னர் அந்த கார் அருகில் வந்த இன்னோவா கார் மீது மோதியது. அதன் பிறகு மேலும் 2 கார்கள் மீது அடுத்தடுத்து மோதி சென்டர் மீடியனில் ஏறி நின்றது.

அப்போது பயங்கர சத்தம் கேட்டது. மோதிய வேகத்தில் காருக்குள் இருந்து புகை கிளம்பியது. காரின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார்கள். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புகையை பார்த்து கார் தீப்பிடிக்கலாம் என்று பயந்து அக்கம் பக்கத்தினர் அருகில் செல்ல பயந்தனர். அதை மீறி சில இளைஞர்கள் சொகுசு காரை நெருங்கி கார் கண்ணாடியை உடைத்து திறந்தனர். உள்ளே மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டனர். அப்போது அவர் நடிகர் சித்தார்த் சுக்லா என்பது தெரியவந்தது. இவர் சில இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். டெலிவிஷன் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி சித்தார்த் சுக்லாவை கைது செய்தனர். அவர் மது அருந்தி உள்ளாரா? என்று சோதனை நடக்கிறது. இந்த விபத்து இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.