சினிமா செய்திகள்
ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல்பிரீத்சிங்?

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், பிரபல தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதில் என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். கிரிஷ் டைரக்டு செய்கிறார்.
என்.டி.ராமராவ் காலத்தில் அவரோடு இணைந்து நடித்த பழம்பெரும் நடிகர்-நடிகைகள் வேடத்துக்கு இப்போதையை முன்னணி நடிகர்-நடிகைகளை அதிக சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்.

என்.டி.ராமராவ் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலனை ஒப்பந்தம் செய்தனர். சாவித்திரியாக கீர்த்தி சுரேசும், எஸ்.வி.ரங்கராவாக மோகன்பாபுவும், நாகேஸ்வரராவாக சுமந்தும் நடிக்கின்றனர். பழம்பெரும் தயாரிப்பாளரும் தாதா சாகிப் பால்கே விருது பெற்றவருமான எல்.வி.பிரசாத் வேடத்தில் சிச்சு செங்குப்தா நடிக்கிறார்.

என்.டி.ராமராவ் மருமகனும் ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவாக ராணா நடிக்கிறார். மறைந்த ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ரகுல்பிரீத் சிங்கிடம் பேசி வருகிறார்கள். என்.டி.ராமராவுடன் இணைந்து 14 படங்களில் ஸ்ரீதேவி நடித்து இருக்கிறார். வேட்டகாடு, பப்பிலி புலி, ஜஸ்டிஸ் சவுத்ரி, கொண்டவீதி சிம்ஹம் ஆகியவை இவர்கள் கூட்டணியில் வெற்றி பெற்ற படங்கள்.

ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க ரகுல்பிரீத் சிங்குடன் பேச்சு நடப்பதாகவும், கால்ஷீட் பிரச்சினை இல்லாமல் இருந்தால் அவர் நடிப்பார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.