சினிமா செய்திகள்
நடிகர்கள், இயக்குனர்களிடம் பணம் பறிக்க முயற்சிநடிகை ஸ்ரீரெட்டி மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

சினிமா டைரக்டர் வாராகி நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தார்.
நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு பட உலகினர் மீது பாலியல் புகார் கூறினார். இப்போது சென்னையில் முகாமிட்டு தமிழ் பட உலகினர் மீதும் குற்றம்சாட்டி வருகிறார். அவருக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் சினிமா டைரக்டரும், நடிகரும், இந்தியன் மக்கள் மன்ற தலைவருமான வாராகி நேற்று சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

“ஆந்திராவை சேர்ந்த நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி தமிழ் பட உலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் மீது மிரட்டும் தொனியில் புகார் கூறி நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இதற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டதற்கு சுமார் 3, 4 வருடங்களுக்கு முன்பு நடந்ததாகவும், ஆதாரம் காட்ட எப்படி முடியும் என்றும், ஒட்டுமொத்த சமுதாயமும் வெட்கப்படும் அளவுக்கு மோசமான வார்த்தைகளால் பதில் கூறியிருக்கிறார். இதே ஸ்ரீரெட்டி 2 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் தெலுங்கு இயக்குனர்கள், நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறினார்.

உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளும் இதில் உள்ளனர் என்று சொன்னார். பின்னர் சமரசம் பேசி இந்த பிரச்சினையை முடித்து கொண்டதாக தகவல். அங்கு பிரபலங்களிடம் பணம் பெற்றுக்கொண்டதைப்போல் தமிழகத்திலும் பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கி பேரம் பேசி வருகிறார்.

நடிகர்கள், இயக்குனர்கள், அரசியல்வாதிகளுடன் தனக்கு பாலியல் தொடர்பு உண்டு என்று கூறி மிரட்டி பணம் பறிப்பதே அவரது திட்டம். இவரே சம்மதித்து பலரிடம் பாலியலில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். எனவே ஸ்ரீரெட்டி மீது விபசார பிரிவின் கீழும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.