கட்சி பணிகள் செய்து கொண்டே “சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்” கமல்ஹாசன் பேட்டி

“கட்சி பணிகள் செய்து கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்” என்று கமல்ஹாசன் கூறினார்.

Update: 2018-07-25 23:59 GMT
சென்னை,

கமல்ஹாசன் டைரக்டு செய்து கதாநாயகனாகவும் நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படம், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது தொடர்பாக அவர், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“விஸ்வரூபம் முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக ‘விஸ்வரூபம்-2’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக முயற்சித்து இருக்கிறோம். இது, அரசியலுக்கு அப்பாற்பட்ட படம். இந்தியா-பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் ஒரு காரணம். அதில் எனக்கு வருத்தம் உண்டு. அதன் அடிநாதம்தான் இந்த படம்.

‘விஸ்வரூபம்-2’ படத்தில், நான் காஷ்மீர் இந்தியா முஸ்லீமாக நடித்து இருக்கிறேன். படம் தாமதமானதில் வருத்தம் இருக்கிறது. என்றாலும், படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. படத்தில், அரசியல் தொடர்பான வசனங்களை சேர்க்கவில்லை. படம் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்து இருக்கிறது.

நான், அரசியலுக்கு வரும் முன் படத்தை எடுத்து முடித்து விட்டேன். அமெரிக்காவுக்கு ஆதரவாக படத்தை எடுக்கவில்லை. இந்த படத்தின் மூன்றாம் பாகம் எடுப்பதும், எடுக்காததும் ரசிகர்கள் படத்துக்கு கொடுக்கும் வரவேற்பை பொருத்து அமையும்.

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்கள் பணி செய்வேன் என்று சொல்வதெல்லாம், பொய். என் தொழில், சினிமா. எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த பிறகும் தொடர்ந்து நடித்தார். அவரைப்போல் கட்சி பணிகள் செய்து கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். என்னால் இயலாது என்று தெரியும்போது, நடிப்பதை விட்டு விடுவேன்.

சினிமா என் தொழில். அதில், நான் வசதியாக இருக்கிறேன். இவரிடம் பணம் இருக்கிறது. ஊழல் பண்ண மாட்டார் என்ற நம்பிக்கையில்தான் பொதுமக்கள் எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். எஞ்சிய வாழ்க்கையில்தான் நான் அரசியலில் ஈடுபடுகிறேன்.

நடிகர் சங்கத்தில், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிற மாதிரி பல நல்ல விஷயங்களை செய்து இருக்கிறார்கள். அவர்களே தொடர்ந்து பதவியில் நீடிப்பதில், எனக்கு கருத்து வேறுபாடு இல்லை.

என் வாழ்க்கையில் தாயாக, தங்கையாக, மகளாக நிறைய பெண்கள் இருக்கிறார்கள். என் மகள் சுருதிஹாசனின் எதிர்காலத்தை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.”

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

பேட்டியின்போது நடிகை பூஜா குமார், இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகிய இருவரும் கமல்ஹாசன் அருகில் அமர்ந்திருந்தார்கள்.

மேலும் செய்திகள்