சினிமா செய்திகள்
ஜெகன்மோகன் ரெட்டி வேடத்தில் நடிக்க அழைப்பா? நடிகர் கார்த்தி விளக்கம்

மறைந்த ஆந்திர முதல்–மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய்.ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை படமாகி வருகிறது.
என்.டி.ராமராவ் வேடத்தில் பாலகிருஷ்ணாவும், ராஜசேகர ரெட்டியாக மம்முட்டியும் நடிக்கின்றனர். பெரிய பட்ஜெட்டில் இந்த படங்களை எடுக்கின்றனர். என்.டி.ராமராவ் படத்தில் அவரது மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடிக்கிறார்.

இதே படத்தில் சந்திரபாபு நாயுடுவாக ராணாவும், சாவித்திரியாக கீர்த்தி சுரேசும், எஸ்.வி.ரங்காராவாக மோகன்பாபுவும் நடிக்கின்றனர். ராஜசேகர ரெட்டி படத்தில் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி வேடத்துக்கு நடிகர் தேர்வு நடிக்கிறது. கார்த்தியை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்தி சமீபத்தில் நடித்த கடைக்குட்டி சிங்கம் ஆந்திராவில் சின்னபாபு என்ற பெயரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடுகிறது. அவருக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகமான ரசிகர்களும் இருக்கிறார்கள். எனவே ஜெகன் மோகன் ரெட்டியாக அவரை நடிக்க வைத்து தேர்தலுக்கு படத்தை பயன்படுத்தலாம் என்று அவர்கள் திட்டமிடுவதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து கார்த்தியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்கும்படி எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. நான் ‘தேவ்’ என்ற படத்தில் நடிப்பதற்காக உக்ரைன் செல்கிறேன். இந்த படத்தில் கதாநாயகியாக காஜல்அகர்வால் நடிக்கிறார். லட்சுமண் தயாரிக்கிறார். ரஜத் டைரக்டு செய்கிறார்’’ என்றார்.