சினிமா செய்திகள்
திருமண ஆசை காட்டி இளைஞர்களிடம் மோசடி: நடிகை சுருதி, போலீஸ் அதிகாரி மீது பாலியல் புகார்

திருமண ஆசை காட்டி இளைஞர்களிடம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட நடிகை சுருதி போலீஸ் அதிகாரி மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகளிர் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளார்.
கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் நடிகை சுருதி (வயது 21). இவர் ஆடி போனா ஆவணி என்ற சினிமா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவர், திருமண ஆசைகாட்டி இளைஞர்களிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி நடிகை சுருதியின் தாயார் சித்ரா (47), வளர்ப்பு தந்தை பிரசன்னா வெங்கடேஷ் (37), சகோதரர் சுபாஷ் (19) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து விட்டது. ஆனால் சுருதி மற்றும் சித்ரா தரப்பில் ஜாமீன்தாரர் ஆஜராகி கோர்ட்டில் பிணைத்தொகை செலுத்தாததால் சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் இருந்தனர்.

இந்த நிலையில் சுருதிக்கும், சித்ராவுக்கும் ஜாமீன்தாரர்கள் ஆஜரானதை தொடர்ந்து அவர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதன்படி தினமும் கோவை 3-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு மற்றும் சைபர் கிரைம் போலீசில் காலையில் ஆஜராகி சுருதி கையெழுத்திட வேண்டும்.

நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நடிகை சுருதி நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

நான் யாரையும் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்யவில்லை. என் மீதும், குடும்பத்தினர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள அத்தனை வழக்குகளும் பொய்யானவை. என்னை சிறையில் அடைத்த பின்னர் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது எங்களை எதுவும் பேசவிடாமல் நாங்கள் சொல்வதை எதையும் கேட்காமல் அவர்களே எழுதி வைத்திருந்ததில் எங்களை கையெழுத்திட சொன்னார்கள்.

முதலில் என்னை பெண் போலீசார் தான் விசாரித்தனர். என்னை அவர்கள் அடித்தனர். அப்போது விசாரணை அறைக்குள் வந்த ஒரு அதிகாரி, என்னை நிர்வாணமாக்கி கைவிலங்கு போட்டு விசாரியுங்கள் என்று கூறினார். பின்னர் என்னை நிர்வாணமாக்கி பெண் போலீசை வைத்து போட்டோ எடுத்துக்கொண்டனர். இதை சில பெண் போலீசார் பார்த்து சிரித்தனர்.

எனது உடையை அவர்கள் இழுத்தபோது என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் என்னுடைய போட்டோவை இணையதளத்தில் வெளியிட்டு உனது வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்று அவர் மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். மேலும் என்னை விசாரிக்க வரும் போலீசாரும் துன்புறுத்தி மனம் நோகும்படி பேசி சித்ரவதை செய்தனர்.

அதிகாரிகளின் விருப்பப்படி நடந்து கொண்டால் இந்த வழக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து விடுவோம் என்றும் கூறினார்கள். போலீஸ் விசாரணை முடிந்து நீதிபதியிடம் ஆஜர்படுத்தியபோது போலீசார் என்னை துன்புறுத்தியதை கூறினேன். எனக்கு நேர்ந்த கொடுமை பற்றி மகளிர் ஆணையத்திற்கு மனு அனுப்பி உள்ளேன்.

என்னை துன்புறுத்திய போலீஸ் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டமும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இவ்வாறு நடிகை சுருதி கூறினார். அப்போது அவருடைய தாயார் சித்ரா உடன் இருந்தார்.