சினிமா செய்திகள்
நடிகைகளுக்குள் போட்டி உள்ளதா? – சமந்தா

சமந்தா திருமணத்துக்கு பிறகும் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். கடந்த வருடம் விஜய் ஜோடியாக நடித்த மெர்சல் படம் வந்தது.
சமந்தா இரண்டு மாதங்களுக்கு முன்பு ராம்சரணுடன் நடித்து  தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்த  கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான நடிகையர் திலகம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். விஷால் ஜோடியாக நடித்திருந்த இரும்புத்திரை படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலுமே நல்ல வசூல் பார்த்தது. இப்போது சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ், தமிழ், தெலுங்கில் தயாராகும் யு டர்ன் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

சினிமாவை விட்டு அவர் விலகப்போவதாக திடீர் வதந்தி பரவியது. அதை மறுத்த சமந்தா கணவர் குடும்பத்தினர் சினிமாவில் நடிக்க தடை விதிக்கவில்லை. எனவே தொடர்ந்து நடிப்பேன் என்றார். இந்த நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது அவரிடம் சினிமாவில் நடிகைகளுக்குள் போட்டி உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த சமந்தா, ‘‘கதாநாயகிகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நடிகைகள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். ஒருவரை மற்றவர் ஊக்கப்படுத்த வேண்டும். ஒற்றுமையாக இருப்பதுதான் பலம்’’ என்றார்.