கவர்ச்சி நடிகையின் கடந்த காலம்

ஒருவர் ஒரு துறையில் புகழ்பெற்ற பிறகு, அவர் அதற்கு முன் எந்த துறையில் இருந்தார், என்னவாக விரும்பினார் என்று அறிவது ஒரு சுவாரசியம்.

Update: 2018-07-29 04:59 GMT
ருவர் ஒரு துறையில் புகழ்பெற்ற பிறகு, அவர் அதற்கு முன் எந்த துறையில் இருந்தார், என்னவாக விரும்பினார் என்று அறிவது ஒரு சுவாரசியம். அப்படி, பாலிவுட் கவர்ச்சி நட்சத்திரம் ஜாக்குலின் பெர்னாண்டஸ், தனது சினிமாவுக்கு முந்தைய நாட்கள் குறித்துக் கூறுகிறார்...

‘‘நான் 5 வயதிலேயே மாடலிங் செய்யத் தொடங்கிவிட்டேன். குழந்தைகளுக்கான ஆடை விற்கும் ஒரு கடைக்காக நான் முதலில் மாடலிங் செய்தேன். ஆனால் நான் ஒரு தொழில்முறைரீதியான மாடலாகப் பணியாற்றத் தொடங்கியது 12 வயதில். அப்போது நாங்கள், சிறு தீவு நாடான பக்ரைனில் வசித்தோம். நானும் என் சகோதரியும் சேர்ந்து பேஷன் ஷோக்களில் ‘கேட்வாக்’ செய்தோம். அப்போது மாடலிங் என்பது எங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு போலத்தான் இருந்தது. மாடலிங்கால் எங்கள் கையில் தாராளமாகப் பணம் புரண்டதால் சந்தோஷமாக இருந்தது. நாங்கள் எங்கள் பெற்றோரிடம் எதையும் எதிர்பார்க்க வேண்டியிருக்கவில்லை.

இப்படி மாடலிங் ஒருபுறம் போய்க் கொண்டிருந்தாலும், நடிகை ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஆனால் அது கடினம் என்று தோன்றியதால், அதற்கான முயற்சி எதையும் நான் செய்யவில்லை.

ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக் கழகத்தில் பயிலும் வாய்ப்புக் கிடைத்தபோது, மக்கள் தொடர்பியலை தேர்வு செய்த நான், மாடலிங்கை ஓரமாக மூட்டை கட்டி வைத்துவிட்டேன். நன்கு படித்து ஊடகத்துறைக்கு வர வேண்டும், பி.பி.சி.யில் பணிபுரிய வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.

ஆஸ்திரேலியாவில் இரண்டாண்டு படிப்பு முடிந்ததும், நான் எனது பூர்வீக நாடான இலங்கையில் பணிப் பயிற்சியில் ஈடுபட்டேன். நான் எனது அத்தை ஒருவருடன் இணைந்து, முன்னணித் தொலைக்காட்சி ஒன்றுக்காக ‘நோ வார் ஸோன்’ என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினேன்.

அந்த நிகழ்ச்சிக்காக நான் சில சுவாரசியமான மனிதர்களை பேட்டி கண்டேன், தயாரிப்புப் பணிகளைக் கவனித்தேன். ஆனால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதோ இரவு 11 மணிக்கு (சிரிக்கிறார்). உண்மையில் அதற்கான பிரதான பணிகளைக் கவனித்தது எனது சீனியர்கள்தான். நான் அவர்களுக்கு உதவிதான் செய்தேன்.

அப்போது நான் தினமும் காலை 10 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டும், ஒவ்வொரு வாரமும் அந்த வாரம் என்ன நிகழ்ச்சி செய்யப் போகிறோம் என்று விவாதிப்போம், அதற்கப்புறம் எங்கள் டீம் லீடர் எங்கள் ஒவ்வொருவருக்குமான பணிகளை ஒதுக்கீடு செய்வார். அப்போது நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிவதில் ஆர்வம் காட்டிய நபர்களில் நானும் ஒருத்தி என்பதால் எனக்கு அந்தப் பணி பிடித் திருந்தது.

அதிலும் மதிய உணவு நேரம் ஒரே கேலியும் கலாட்டாவுமாக இருக்கும். நான் எனது பாட்டி சமைத்த உணவை எடுத்துச் சென்றிருப்பேன். மதிய உணவுக்குப் பின் நாங்கள் எங்கள் வேலை தொடர்பாக வெளியே கிளம்பிச் செல்வோம், தேவையான ஆய்வுகளை மேற்கொள்வோம். ஆனால் சில வேளைகளில் சும்மா கூகுளில் மேய்ந்து கொண்டிருப்பதும் உண்டு. அப்படி ஒரு முறை கூகுளில் யதேச்சையாக கேன்ஸ் திரைப்பட விழா பற்றியும், அதற்கு ஐஸ்வர்யா ராய் அணிந்து சென்றிருந்த ஆடை பற்றியும் பார்த்தேன். அப்போது எனக்கு இந்தி நடிகையாகவேண்டும் என்ற ஆசை எல்லாம் இருந்ததில்லை.

இப்படி நான் இரண்டாண்டு காலம் ஊடகப் பணியை செய்துகொண்டிருந்தபோது, என் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் அதிக தூரமில்லை என்றாலும், போக்குவரத்துக்கே சம்பளத்தில் பெரும்பகுதி செலவானது. அந்த அளவுக்கு சம்பளம் குறைவாக இருந்தது. ஆனால் நான் பக்ரைனில் இருந்தபோது 15 வயதிலேயே நிறைய சம்பாதித்தேன். அவ்வப்போது ஒன்றிரண்டு பேஷன் ஷோக்களில் நடை போட்டாலே கை நிறையப் பணம் கிடைத்துவிடும். அப்படிக் கிடைத்த பணத்தில்தான் நான் ஒருமுறை ஒரு பிரபல பிராண்ட் கடைக்குச் சென்று, அங்கு இருப்பதிலேயே குட்டியான ஒரு ‘பேக்’ வாங்கினேன். அது ரொம்ப மலிவானதுதான். ஆனால் அதுதான் நான் முதன்முதலில் வாங்கிய பிரபல பிராண்ட் பேக். அப்போது சம்பாதித்த பணத்தில் என் தாயாருக்கு காதணிகளும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.

இலங்கையில் நான் ஊடகவியலாளர் பணியில் இருந்து விலகியதும், மறுபடி மாடலிங்கில் ஈடுபடத் தொடங்கினேன். அங்கே மாடலிங் உலகம் அவ்வளவு பெரிதானது இல்லை, பேஷன் ஷோக்களும் எப்போதாவதுதான் நடக்கும் என்றாலும், ஓரளவு வருவாய் வந்துகொண்டிருந்தது. ஆனால் பிரபஞ்ச அழகிப் போட்டிக்கான இலங்கை அழகிப் போட்டியில் நான் வெற்றி பெற்றபோதுதான் என் வாழ்வில் பெரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. எனக்கு இந்தியாவில் இருந்தும் மாடலிங் வாய்ப்புகள் வரத் தொடங்கின. நிறைய பயணம் செய்யத் தொடங்கிய நான், நிறைய சம்பாதிக்கவும் ஆரம்பித்தேன். இந்தியாவில் ஒரு ஷோவில் கலந்துகொண்டாலே பெருமளவு பணம் கிடைத்ததும் நான் ஆச்சரியப்பட்டேன்.

இந்தியாவில் மாடலிங் செய்யத் தொடங்கியதுமே எனக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டின. ஆனால் ‘அலாடின்’ படத்துக்கு முன், சினிமா வாழ்க்கை எப்படிப் போகும் என்ற தெளிவு எனக்கு இல்லை. ‘அலாடின்’ படத்தின் மூலம், உலகின் மிகப் பெரிய திரையுலகுகளில் ஒன்றான பாலிவுட்டில், மாபெரும் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுடன் நடித்தேன். நான் ஆரம்பத்தில் கனவு கண்டது ஆலிவுட் பற்றித்தான். ஆனால் இந்தித் திரையுலகில் எனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிட நான் விரும்பவில்லை. இப்போது, நான் செய்யும் வேலையை மிகவும் ரசிக்கிறேன்.

இன்று என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால், நான் எனது இதயம் சொன்னபடி நடந் திருக்கிறேன், அதுதான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று தோன்றுகிறது. எனவே, தங்கள் குழந்தைகள் எதுவாக ஆக விரும்புகிறார்களோ அதற்கு அவர்களது பெற்றோர் அனுமதிக்க வேண்டும். அவர்கள் தாங்கள் விரும்பும் விஷயத்தில் கடினமாக உழைக்கவும், அதில் சிறந்தவராகவும் ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில், எனது பெற்றோர் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அதனால் நான், ஆசீர்வதிக்கப்பட்டவள்!’’

மேலும் செய்திகள்