சினிமா செய்திகள்
குருவியார் கேள்வி-பதில்கள்

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடிப்பிடித்து நடிக்கும் கதாநாயகிகள் யார்–யார்? அவர்களின் நோக்கம் என்ன? (பி.ஜெய விநாயகம், சென்னை–4)

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, அஞ்சலி...இன்னும் சிலர்...சினிமாவில் மார்க்கெட் இழந்தால், அரசியலுக்கு தாவி விடலாம்...அப்படியே முதல்–அமைச்சராகவும் ஆகிவிடலாம் என்பது இவர்களின் தொலைதூர ஆசையாம்!

***

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய பாண்டிராஜ், அடுத்த படத்துக்கு எந்த கதாநாயகனை அணுகியிருக்கிறார்? (எம்.சுதாகரன், வேலூர்)

கார்த்தியையே அணுகியிருக்கிறாராம். கதை சொல்லப்பட்டு விட்டதாகவும், அந்த கதை கார்த்திக்கு பிடித்து இருப்பதாகவும் கோடம்பாக்கம் முழுவதும் ஒரு தகவல் பரவியிருக்கிறது!

***

குருவியாரே, திரிஷா, ‘கொடி’ படத்தில் வில்லியாக நடித்தது போல் இன்னொரு படத்திலும் வில்லியாக நடிப்பாரா? (என்.சுதர்சன், கோவை)

ஒரு படத்தில் வில்லியாக நடிக்க வேண்டும் என்று திரிஷா ஆசைப்பட்டாராம். அந்த ஆசை, ‘கொடி’ படத்தின் மூலம் தீர்ந்து விட்டதாம். அதனால், இனிமேல் வில்லியாக நடிக்க மாட்டாராம்!

***

காணாமல் போன கனகாவுக்கு உடன் பிறந்த சகோதரர்–சகோதரிகள் இருக்கிறார்களா? (எம்.சின்னதம்பி, பொள்ளாச்சி)

மறைந்த நடிகை தேவிகாவின் ஒரே வாரிசு, கனகா மட்டுமே...!

***

குருவியாரே, தமிழ் திரையுலகின் மிக சிறந்த நடிகைகளில் ஒருவரான சரிதா, இப்போதெல்லாம் நடிப்பதில்லையே, ஏன்? குண்டு உடம்புடன் நடிக்க அவர் வெட்கப்படுகிறாரா? (சுந்தரபாண்டியன், மதுரை)

சரிதா குண்டு உடம்புடன் நடிக்க வெட்கப்படவில்லை. அவர் குண்டு உடம்புடன் ஏற்கனவே ‘ஜூலி கணபதி’ படத்தில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் சினிமாவை விட்டு ஒதுங்கி, 2 மகன்களுடன் துபாயில் வசித்து வருகிறார்!

***

கீர்த்தி சுரேசுக்கு எது அழகு? அவருடைய சிரிப்பா, ஒல்லியான உடற்கட்டா? (சு.வினோத், சேலம்)

அவருடைய சிரிப்பே எல்லா கதாநாயகர்களையும் கவர்ந்திருக்கிறதாம்!

***

குருவியாரே, சந்தானத்தை இப்போது வெண்திரையில் பார்க்க முடிவதில்லையே...என்ன காரணம்? (எஸ்.பி.நரேஷ்குமார், குரும்பூர்)

அவர் கதாநாயகனாகி விட்டதால், மற்ற கதாநாயகர்களின் படங்களில் நடிப்பதில்லை. அவர் நகைச்சுவை நாயகனாக நடித்துள்ள ‘சர்வர் சுந்தரம்,’ ‘தில்லுக்கு துட்டு–2’ ஆகிய 2 படங்களும் முடிவடைந்து விட்டன. இரண்டில் ஒன்று வெகு விரைவில் திரைக்கு வரும்!

***

‘‘நான் தன்னந்தனி காட்டு ராஜா...என் தோட்டத்தில் எத்தனை ரோஜா...’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (இ.ஜெயராமன், ஸ்ரீவைகுண்டம்)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘எங்க மாமா.’ பாடல் காட்சியில் நடித்தவர், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்!

***

குருவியாரே, விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா? (வி.தமிழ் துரை, மேலப்பாளையம்)

வரவேண்டிய நேரத்துக்கு கண்டிப்பாக வந்து நிற்பாராம்!

***

எந்த பெண்ணிடமும் இல்லாத ஒன்று. ஏதோ ஏதோ உன்னிடம் இருக்கிறது. அதை அறியாமல் விட மாட்டேன்...அதுவரை உன்னை தொட மாட்டேன்’’ என்ற பாடல் எந்த படத்தில் இடம் பெற்றது? பாடலை பாடியவர் யார்? (கே.காசிநாதன், சீர்காழி)

அந்த பாடல், பாரதிராஜா டைரக்டு செய்த ‘கேப்டன் மகள்’ படத்தில் இடம் பெற்றது. பாடலை பாடியவர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!

***

குருவியாரே, தனுஷ் இந்தி படத்தில் நடிக்கிறாரே...அவருக்கு இந்தி தெரியுமா? (ஆர்.கோபால், ஊத்துக்கோட்டை)

வசனகர்த்தா சொல்லிக் கொடுப்பதை புரிந்து கொண்டு பேசிவிடக்கூடிய திறமை தனுசுக்கு உண்டாம்!

***

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடித்த ‘தடக்’ (இந்தி) படம் எப்படி ஓடுகிறது? அது வெற்றி படமா, தோல்வி படமா? (எஸ்.சக்திவேல், ஊட்டி)

மகள் ஜான்விக்கு பின்னால் இருந்து உதவுவது போல், ஸ்ரீதேவியின் ஆத்மா உதவியிருக்கிறதாம். ‘ஜான்வி’ படத்துக்கு திரையிட்ட இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

***

குருவியாரே, கிருஷ்ணா–பிந்து மாதவி நடித்து வந்த ‘கழுகு–2’ படம் எந்த நிலையில் உள்ளது? (ஜே.சதீஷ், வந்தவாசி)

‘கழுகு–2’ படத்தின் வசன காட்சிகளை 28 நாட்களில் முடித்துக் கொடுப்பதாக தயாரிப்பாளரிடம் டைரக்டர் சத்யசிவா வாக்குறுதி அளித்து இருந்தார். அவர் சொன்ன தேதிக்கு முன்பாகவே 23 நாட்களில் வசன காட்சிகள் முழுவதையும் படமாக்கி முடித்துக் கொடுத்து விட்டார். பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி!

***

உயரமான கதாநாயகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, இப்போது எந்த படத்தில் நடித்து வருகிறார்? அந்த படத்தில், அவருக்கு ஜோடி யார்? டைரக்டர் யார்? (ஏ.செல்வராஜ், ஜோலார்பேட்டை)

ஜெயம் ரவி தற்போது, ‘அடங்க மறு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராசிகன்னா நடிக்கிறார். கார்த்திக் தங்கவேல் இயக்குகிறார்!

***

குருவியாரே, திரையுலகில் பிழைக்க தெரிந்த நடிகைகள் என்று யாரையெல்லாம் சொல்லலாம்? (கே.பி.அன்வர் பாட்ஷா, அரக்கோணம்)

நயன்தாரா, திரிஷா, சமந்தா, காஜல் அகர்வால், நிக்கி கல்ராணி ஆகிய 5 பேரையும் சொல்லலாம்!

***

அமலாபால் இந்தி படத்தில் நடிக்கிறாராமே...தமிழ் பட உலகில் இருந்து அவர் இந்தி பட உலகுக்கு போக என்ன காரணம்? அங்கே அவர் வெற்றி பெறுவாரா? (வே.ரவீந்தர், புதுச்சேரி)

அமலாபால் எதிர்பார்க்கும் ‘பரந்து விரிந்த களம்’ அங்கேதான் இருக்கிறதாம். இன்னும் சுதந்திரமாக ஆடிப்பாட அது வசதியாக இருக்குமாம். தமிழ் பட உலகில் பரபரப்புகளை ஏற்படுத்தியது போல், இந்தி பட உலகிலும் சில பல பரபரப்புகளை ஏற்படுத்தி பிரபலமாக அவர் திட்டமிட்டுள்ளாராம்!

***

குருவியாரே, ஹரி இயக்கியுள்ள ‘சாமி–2’ படத்தில் திரிஷா இடத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் நிரப்புவாரா? (வி.முரளிகாந்த், வேலப்பன்சாவடி)

அந்த நம்பிக்கையில்தான் ஐஸ்வர்யா ராஜேசை ஹரி ஒப்பந்தம் செய்து இருக்கிறாராம்!

***

‘சீமராஜா’ படத்தில், கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு சமந்தா சிலம்பம் விளையாட கற்றுக் கொடுப்பது உண்மையா? (ஹரிகிருஷ்ணன், குடியாத்தம்)

கதைப்படி, சிலம்ப விளையாட்டில் சமந்தா தேர்ந்தவர். அவரிடம், சிவகார்த்திகேயன் சிலம்பம் விளையாட கற்றுக் கொள்வது போன்ற காட்சிகள், ‘சீமராஜா’ படத்தில் இடம் பெற்றுள்ளதாக பேசப்படுகிறது!

***