என்.டி.ராமராவ் மனைவி வேடத்தில் நடிக்க வித்யா பாலனுக்கு ரூ.1 கோடி

மறைந்த ஆந்திர முதல்-மந்திரியும் பிரபல தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படமாகிறது.

Update: 2018-07-30 22:15 GMT
மறைந்த ஆந்திர முதல்-மந்திரியும் பிரபல தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படமாகிறது. எம்.ஜி.ஆரைப்போல் இவரும் ஆந்திராவில் கொடிகட்டி பறந்தார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை கைப்பற்றினார்.

அவரது சிறுவயது வாழ்க்கை, கதாநாயகனாகி திரையுலகில் நிகழ்த்திய சாதனைகள், தனிகட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தது, தேர்தலில் வென்று முதல்-மந்திரியாகி ஆந்திர மாநிலத்தில் அமல்படுத்திய திட்டங்கள் என்று அவரை சார்ந்த விஷயங்களையும் அவர் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களையும் இந்த படத்தில் காட்சிப்படுத்துகிறார்கள். ரூ.50 கோடி செலவில் படம் தயாராகிறது.

இதில் என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணாவும் மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலனும் நடிக்கின்றனர். சந்திரபாபுநாயுடுவாக ராணாவும் என்.டி.ராமராவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள சாவித்திரியாக கீர்த்தி சுரேசும், ஸ்ரீதேவியாக ரகுல்பிரீத் சிங்கும் நடிக்கின்றனர். இந்த படத்தை கிரிஷ் டைரக்டு செய்கிறார். இவர் தமிழில் சிம்பு, பரத், அனுஷ்கா நடித்த வானம் படத்தை இயக்கியவர்.

என்.டி.ஆர் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வித்யாபாலன் இதில் நடிக்க முதலில் தயங்கியதாகவும் என்.டி.ராமராவ் குடும்பத்தினர் வற்புறுத்தி நடிக்க வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.1½ கோடி சம்பளம் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத் வந்த வித்யாபாலனை என்.டி.ஆர் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து மகிழ்வித்தனர்.

மேலும் செய்திகள்