படப்பிடிப்பு முடிந்தது ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இமாசலபிரதேச மாநிலத்தில் 35 நாட்கள் நடந்தது.

Update: 2018-07-30 23:00 GMT
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இமாசலபிரதேச மாநிலத்தில் 35 நாட்கள் நடந்தது. டார்ஜிலிங் பகுதியில் மலைபிரதேசங்களிலும் முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள். பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுத்து சென்னை வந்த ரஜினிகாந்த் அரசியல் நடவடிக்கை குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தினார். அதன்பிறகு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மீண்டும் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் புறப்பட்டு சென்றார். அங்கு 2 வாரங்களாக படப்பிடிப்பு நடந்தது. ரஜினிகாந்தும், கதாநாயகியாக வரும் சிம்ரனும் நடிக்கும் காட்சிகளையும் படமாக்கினார்கள். சண்டை காட்சிகளையும் எடுத்தனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதி வார்டன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. பகலில் விடுதியில் பணியாற்றும் அவர் இரவில் தாதாவாக மாறி சமூக விரோதிகளுடன் மோதுவதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதாக பேசப்படுகிறது. இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

டேராடூனில் நடந்த படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. எனவே இன்று அல்லது நாளை ரஜினிகாந்த் சென்னை திரும்பி காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்கிறார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று தெரிகிறது. மதுரையிலும் சில காட்சிகளை படமாக்குகின்றனர். தற்போது 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பையும் முடித்து விட திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்