சினிமா செய்திகள்
விவாகரத்து செய்து பிரிந்தவர்கள் சமரசம்ஹிருத்திக் ரோ‌ஷன்–சுசானே மறுமணம்?

ஹிருத்திக் ரோ‌ஷன்–சுசானே மறுமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஹிருத்திக் ரோ‌ஷனுக்கும் மும்பையை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சுசானே கானுக்கும் 2000–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹிரேஹன், ஹிரிதான் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். மகிழ்ச்சியாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டு 2014–ல் விவாகரத்து செய்து பிரிந்தார்கள். 

இவர்கள் மோதலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. ஹிருத்திக் ரோ‌ஷனுக்கும் நடிகை கங்கனா ரணாவத்துக்கும் தகாத தொடர்பு இருந்ததாகவும் அது சுசானேவுக்கு தெரிய வந்து தகராறு செய்து பிரிந்ததாகவும் கூறினர். இதனை உறுதிபடுத்துவதுபோல் கங்கனா ரணாவத்தும்  சமீபத்தில் எனது முன்னாள் காதலர் ஹிருத்திக் ரோ‌ஷன் என்று குறிப்பிட்டு இருந்தார். 

இருவருக்குமான காதல் உரையாடல்களும் வெளிவந்தன. இதனால் கங்கனாவுக்கும் ஹிருத்திக்குக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் வக்கீல் நோட்டீஸ்களும் அனுப்பினார்கள். இதுபோல் தன்னுடன் நடித்த வேறு சில நடிகைகளுடனும் ஹிருத்திக் ரோ‌ஷனுக்கு தொடர்பு இருந்ததாகவும் கூறப்பட்டது. 

விவாகரத்துக்கு பிறகு ஹிருத்திக்–சுசானே இருவருமே திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்கள். குழந்தைகளுக்காக அவர்கள் அடிக்கடி சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டன. இப்போது ஹிருத்திக் ரோ‌ஷன் திருந்தி விட்டதாக கருதியதால் அவருடன் சுசானே நெருக்கமாகி இருக்கிறார். 

வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்று வருகிறார்கள். ஒரே காரில் பயணிக்கின்றனர். ஓட்டல்களில் ஒன்றாக விருந்து சாப்பிடுகிறார்கள். இதனால் மறுமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் பதிவு திருமணம் செய்து கொள்வார்கள் என்று தெரிகிறது.