சினிமா செய்திகள்
8 வருடங்களுக்கு பிறகு அபிஷேக்பச்சனுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யாராய்

ஐஸ்வர்யாராயும் அபிஷேக்பச்சனும் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் 2007–ல் தமிழ், இந்தியில் திரைக்கு வந்த ‘குரு’ படத்தில் ஐஸ்வர்யாராயும் அபிஷேக்பச்சனும் ஜோடியாக நடித்து இருந்தனர். குரு படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் ராவணன் என்ற பெயரிலும் இந்தியில் ராவண் என்ற பெயரிலும் தயாரான படத்தில் இணைந்து நடித்தார்கள். 

இந்த படம் 2010–ல் வெளிவந்தது. அதன்பிறகு இருவரும் ஜோடியாக நடிக்கவில்லை. 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் இருவரும் ‘குளோப் ஜாமுன்’ என்ற புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. 

இதில் நடிப்பது குறித்து ஐஸ்வர்யாராய் கூறும்போது, ‘‘இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு வருடத்துக்கு முன்பே படத்தின் கதையை சொல்லிவிட்டார். மிகவும் பிடித்து இருந்தது. இப்போது அதில் நானும் அபிஷேக் பச்சனும் இணைந்து நடிக்கிறோம்’’ என்றார். ஐஸ்வர்யாராய் மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது அபிஷேக் பச்சனுக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிய முடிவு செய்துள்ளனர் என்றும் இந்தி பட உலகில் கிசுகிசு பரவிய நிலையில் இருவரும் சேர்ந்து நடிப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.