மத உணர்வை புண்படுத்துவதாக ஜான் ஆபிரகாம் படத்துக்கு எதிர்ப்பு

ஜான் ஆபிரகாம் நடித்துள்ள சத்யமேவ ஜெயதே படத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

Update: 2018-08-01 22:00 GMT
இந்தி படங்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குகின்றன. தீபிகா படுகோனேவின் பத்மாவத் படத்துக்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது. வன்முறை சம்பவங்களும் நடந்தன. இப்போது ஜான் ஆபிரகாம் நடித்துள்ள சத்யமேவ ஜெயதே படத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த படம் வருகிற 15–ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். 

இதில் மனோஜ் பாஜ்பாய், அம்ருதா கான்விகார், ஆயிஷா ‌ஷர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். மிலாம் மிலானி சவேரி இயக்கி உள்ளார். ஜான் ஆபிரகாம் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி சையது அலி ஜாப்பரி என்பவர் ஐதராபாத்தில் உள்ள தபீர் புரா போலீசில் புகார் அளித்துள்ளார். 

குறிப்பிட்ட சமூகத்தினரின் மத நம்பிக்கைக்கு எதிரான காட்சிகள் டிரெய்லரில் உள்ளது. இது மனதை புண்படுத்துகிறது. சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலும் காட்சிகள் வைத்துள்ளனர். எனவே அந்த காட்சிகளை நீக்கிய பிறகே படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

மதத்தை இழிவுபடுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல், இரு பிரிவினருக்கிடையே பகையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

மேலும் செய்திகள்