சமரச முயற்சி தோல்வி விசு–பாக்யராஜ் மோதல் நீடிப்பு

பாக்யராஜ்–விசு இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்து, மோதல் நீடிப்பதாக கூறப்படுகிறது.

Update: 2018-08-02 23:30 GMT
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தற்போதைய தலைவர் பாக்யராஜுக்கும் முன்னாள் தலைவர் விசுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சங்க பணம் ரூ.37 லட்சத்தை விசு, பிறைசூடன், மதுமிதா ஆகியோர் கையாடல் செய்து விட்டதாக பாக்யராஜ் போலீஸ் கமி‌ஷனர் அலுவலத்தில் புகார் கொடுத்தார். 

பணத்தை கையாடல் செய்யவில்லை என்றும் வங்கியில் அது பத்திரமாக இருக்கிறது என்றும் உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விசு விளக்கம் அளித்தார். உங்கள் மனிதாபிமானம் செத்துவிட்டதா? என்றும் பாக்யராஜுக்கு அவர் கேள்வி விடுத்து இருந்தார். 

இதற்கு பாக்யராஜும் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அறக்கட்டளை பணத்தை வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்கு செலவு செய்ய முயற்சிக்கிறோம் என்று நீங்களாகவே கற்பனை செய்து அதனால்தான் பணத்தை தர மறுப்பதாக கூறுவது கபட நாடகம் என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில் பாக்யராஜ்–விசு இடையே சமரசம் ஏற்படுத்தும்  முயற்சி  நடந்து அது தோல்வி அடைந்து விட்டது. இதுகுறித்து விசு கூறியிருப்பதாவது:– 

‘‘நகைச்சுவையின் நாயகனாக தமிழக மக்களால் கருதப்பட்ட,  கருதப்படும், இனிமேலும் கருதப்படப்போகும் பாக்யராஜ் அவர்களே, உங்களது வண்டியை நீங்கள் தேவை இல்லாமல் எக்மோர் பக்கம் திசை திருப்பியதுபோல் மீண்டும் மீண்டும் சொதப்பாமல் திரைத்துறையில் உங்களுக்கு இருக்கும் நற்பெயரை காப்பாற்றிக்கொண்டு, கொச்சைப்படுத்தப்பட்ட மதுமிதாவின் தகப்பனாரிடம் பேசி ஒரு விளக்கமும் உங்களாலும் உங்களது செயற்குழுவில் உள்ள சில சுயநலக்கிருமிகளாலும் அவமானப்படுத்தப்பட்ட பிறைசூடனை கூப்பிட்டு சங்க அலுவலத்தில் மதிப்புடனும் மரியாதையுடனும் உட்கார வைத்து பேசினால் அதைத்தொடர்ந்து சுந்தரராமனும் பிறைசூடனும் மகிழ்ந்து எனக்கு பச்சை கொடி காட்டினால் இந்த விசு வெறும் ஜுஜுபி சார்... வெள்ளைக்கொடியை தூக்கி காட்டி ஓடோடி உங்களை நோக்கி வந்து விடுவேன். இல்லையென்றால் சுத்தமான கைக்கு சொந்தக்காரர் பிறைசூடனுக்கு தளபதியாகவே என்றென்றும் இருப்பேன்.’’

இவ்வாறு  விசு  கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்