நம்ம ஊரு ஹாலிவுட் இயக்குனர்

மனோஜ் நைட் ஷியாமளன், ‘நம்ம ஊரு ஹாலிவுட் இயக்குனர்’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு தமிழ்நாட்டிற்கும், ஹாலிவுட் வட்டாரத்திற்கும் மிக நெருக்கமானவர்.

Update: 2018-08-04 10:37 GMT
1970-ம் ஆண்டு புதுச்சேரிக்கு உட்பட்ட ‘மாஹே’ பகுதியில் பிறந்த மனோஜ், இன்று ஹாலிவுட்டையே மிரட்டும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஏனெனில் இவர் கதை எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படங்களில் பெரும்பாலானவை மிரட்டல் வரிசை திரைப்படங்கள் தான்.

‘அன்பிரேக்கபில்’, ‘ஸ்பிலிட்’, ‘டெவில்’, ‘சிக்ஸ்த் சென்ஸ்’, ‘தி வில்லேஜ்’, ‘சைன்ஸ்’, ‘தி சார்க் இஸ் ஸ்டில் ஒர்க்கிங்’ போன்ற திரைப்படங்கள் இவரது மிரட்டலுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். இவை மட்டுமின்றி, வில் ஸ்மித் நடித்த ‘ஆப்டர் தி எர்த்’, ‘தி லாஸ்ட் ஏர் பெண்டர்’ போன்ற அதிரடி படங்களையும் இயக்கியிருக்கிறார். அத்துடன் அனிமேஷன் படமான ‘ஸ்டூவர்ட் லிட்டில்’ படமும் நம்ம ஊரு இயக்குனரின் கற்பனைக் கதை தான்.

மாறுபட்ட திரைப்படங்களை கொடுத்தாலும், மனோஜின் முழுக் கவனமும் ‘சைக்கோ திரில்லர்’ மற்றும் ‘ஈஸ்ட்ரயல் 177 ட்ரயாலஜி’ பக்கமே இருக்கிறது. தற்போது கூட ‘கிளாஸ்’ என்ற திரைப்படத்தை ‘ஈஸ்ட்ரயல் 177 ட்ரயாலஜி’ வகையில் இயக்கி வருகிறார். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ஹாலிவுட்டின் ஹாட் டாக்காக மாறிவிட்டது. ஏனெனில் ஹாலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் இந்தத் திரைப்படத்தில் சைக்கோ கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

‘டை ஹார்ட்’ புகழ் புரூஸ் வில்லீஸ், ‘அவெஞ்சர்’ புகழ் சாமுவேல் ஜாக்சன், ‘எக்ஸ் மேன்’ புகழ் ஜேம்ஸ் மெக்காய், ஆனா டெய்லர், சாரா பால்சன் என ஏராளமான ஹாலிவுட் நட்சத்திரங்களை தன்னுடைய படத்தில் சைக்கோக்களாக திரியவிட்டிருக்கிறார், மனோஜ்.

குறிப்பாக கதாநாயகனான ஜேம்ஸ் மெக்காய், ‘அந்நியன்’ திரைப்பட பாணியில் தனக்குள் 23 மாறுபட்ட கதாபாத்திரங்கள் புதைந்திருக்கும் நபராக நடித்திருக்கிறார். புரூஸ் வில்லீஸ், பல அதிசய சக்திகள் கொண்ட கெவின் டன் என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். இதுவரை ஆராய்ச்சியாளராகவும், அறிவியலாளராகவும் அசத்திய சாமுவேல் ஜாக்சன், இந்தப் படத்தின் மூலம் கொடூர கொலைகளை அரங்கேற்றுபவராக நடித்திருக்கிறாராம். அதனால்தான் ‘கிளாஸ்’ திரைப்படம், டிரைலரிலேயே பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. இது ஒரு ‘ஈஸ்ட்ரயல் 177 ட்ரையாலஜி’ வரிசைப் படமாகும். ஷியாமளனின் ‘அன்பிரேக்கபில்’ மற்றும் ‘ஸ்பிலிட்’ படங்களின் கருவான, ஈஸ்ட்ரயல் 177 ட்ரயாலஜியை அடிப்படையாகவும், அதன் தொடர்ச்சியாகவும் தயாரிக்கப்பட்டுள்ளதால், ‘கிளாஸ்’ திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கியது.

அது என்ன ‘ஈஸ்ட்ரயல் 177 ட்ரயாலஜி’?

ஒரு ரெயில் விபத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ‘சைக்கோ திரில்லர்’ திரைப்படங்களையே, ‘ஈஸ்ட்ரயல் 177 ட்ரயாலஜி’ படங்கள் என்கிறார்கள். ஒரு கோர ரெயில் விபத்தில் இருந்து கதாநாயகன் மட்டும் உயிர் பிழைக்கிறார். அவரது மனநிலை எப்படி இருக்கும்? என்பதை அடிப்படையாக வைத்தே ‘ஈஸ்ட்ரயல் 177 ட்ரயாலஜி’ திரைப்படம் நகரும். உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான கதாபாத்திரங்கள், அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள்? என்பதே திரைக்கதையாக இருக்கும். இதற்கிடையில் ‘அந்நியன்’ திரைப்பட பாணியில், கதாநாயகனுக்குள் 20-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் தோன்றி மறைவார்கள். நம்ம ஊரு ‘அந்நியன்’ படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதும், இத்தகைய திரைப்படங்கள் தான். 

மேலும் செய்திகள்