சினிமா செய்திகள்
12 வயதிலே பாலியல் தொந்தரவுக்குள்ளான லிசா ஹைடன்

‘‘இன்றும் நான் ‘ஈவ் டீசிங்’ தொல்லைக்கு உள்ளாகிறேன்’’ என்கிறார், இந்தியாவின் சூப்பர் மாடல் லிசா ஹைடன்.
 லிசா ஹைடன் இக்கஷ்டத்தை அனுபவிப்பதாலோ என்னவோ, பெண்கள் தங்களை தேவையில்லாமல் உற்றுநோக்கும் ஆண்களை திரும்பி முறைக்க வேண்டும், தங்கள் மீதான எந்த அத்துமீறலையும் சகித்துக்கொள்ளக் கூடாது என்ற பிரசாரத்தையும் முன்னெடுத் திருக்கிறார்.

லிசா ஹைடனின் பேட்டி:

நீங்கள் மாடலிங் துறைக்கு வருவதற்கு முன்பும் ஈவ் டீசிங் தொந்தரவுக்கு உள்ளானீர்களா?

அது பலமுறை நடந்திருக்கிறது. இன்றும்கூட என் காதுபட சொல்லப்படும் கமெண்டுகள், என்னைப் பார்த்து அடிக்கப்படும் விசில்கள் என்று அதற்கு அளவே இல்லை. மும்பையில் ஒரு பொது இடத்தில், பலரும் பார்த்திருக்கும் போது என்னை ஒருத்தன் நெருங்கினான். எனக்கு அப்போது 12 வயதுதான். ஏதும் அறியாத சின்னப் பொண்ணு. ஆனால் அவனது தவறான நோக்கத்தை உணர்ந்து, உரத்த குரலில் என் பெற்றோரை அழைத்தேன். அந்த ஆளை அங்கிருந்து துரத்தச் செய்தேன்.

இத்தகைய தொந்தரவுகளை இளம்பெண்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுகிறீர்கள்?

வக்கிர மனம் கொண்ட ஆண்கள், அதற்காக வெட்கப்பட வேண்டும். அதேநேரம், பெண்கள் தங்கள் மீது விழும் ஆண் களின் தேவையற்ற பார்வைகள் குறித்து எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும் என்று நான் பிரசாரம் செய்கிறேன். மேலும் நாங்கள் நிதி திரட்டி, ஏழைப் பெண்கள், குழந்தைகளின் கல்வி, நலவாழ்வுக்கு உதவுகிறோம்.

நீங்கள் தொகுத்து வழங்கும் ‘டாப் மாடல் இந்தியா’ தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றி சொல்லுங்கள்?

அந்த நிகழ்ச்சியின், அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, பன்முகத்தன்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதில் பங்குபெறும் அனைவருக்கும் நாங்கள் சமவாய்ப்பு வழங்குகிறோம். சிறு நகரங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும், உடனடியாகப் புகழ்பெறவும் வாய்ப்புக் கிடைக்காது. அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் வாய்ப்பு அளிக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் எனது பயணம் சிறப்பானது. இதை தொடரவும் நான் ஆவலாயிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியின்போது, நீங்கள் மாடலிங் துறைக்குள் நுழைந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றனவா?

ஆமாம். நிகழ்ச்சியின் பல்வேறு அம்சங்களில் என்னால் நேரடியாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது. நான் ஒரு சாதாரண மாடலாக இருந்த தொடக்க நாட்கள், ஒரு புது மாடலுக்கு இருக்கும் தயக்கம், பயம், பேஷன் ஷோவில் எப்படி தடுமாறாமல் நடைபோடுவது என்ற யோசனை எல்லாம் மீண்டும் எனக்குள் ஒருமுறை ஓடுகின்றன. புதிய மாடல்களை வளர்த்தெடுப்பதும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும் நான் இத்துறைக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.

உங்களின் வெப் சீரிஸான ‘தி டிரிப்’பை திரைப்படமாக்கும் எண்ணம் இருக்கிறதா?

‘தி டிரிப்’ இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் நான் அதில் நடிக்கவில்லை. காரணம் நான் இப்போது வேறு சில தளங்களில் செயல்பட வேண்டியிருக்கிறது. என்னால் தற்போது ‘தி டிரிப்’ படப்பிடிப்புக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.

உங்களின் புதிய கூந்தல் நிறம் பலரையும் கவர்ந்திருக்கிறது. அந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன?

நான் ஏதோ ரொம்ப வித்தியாசமாய் செய்திருக்கிற மாதிரி எனக்குத் தோன்றுகிறது. நான் எனது கூந்தலை குட்டையாக வெட்டிக்கொள்ள வேண்டும் அல்லது பொன்னிறம் கலந்த சாம்பல் நிறத்தைப் பூசிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். கடைசியில், இரண்டாவ தையே தேர்வு செய்தேன். கூந்தலை நிறம் மாற்ற வாய்ப்பு கிடைத்ததும் நான் அதைப் பயன்படுத் திக்கொண்டேன்.

உங்களின் கவர்ச்சியான சரும அழகின் ரகசியம் என்ன?

எப்போதுமே, இயற்கையான, எளிமையான மேக்கப்பில்தான் எனக்கு நம்பிக்கை. கண்டதையும் பூசி நான் எனது சருமத்தை அதிகம் கஷ்டப் படுத்துவதில்லை. சன்ஸ்கிரீன் போன்றவற்றைப் போட்டால் எனக்கு ஒத்துக்கொள்ளாது. எனவே அதைத் தவிர்க்கிறேன். நான் நிறையத் தண்ணீர் குடிப்பதில்தான் என் சரும ரகசியம் இருப்பதாக கருதுகிறேன்.

நீங்கள் முறைப்படி திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளீர்கள். தாயான பின்பு உங்கள் வாழ்க்கையில் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன?

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், நான் தாயான பின்பு ஒரே நேரத்தில் பல பந்துகளை தூக்கிப் போட்டு பிடிப்பது மாதிரி இருக்கிறது. வீட்டு வேலைகள், வெளி வேலை, மனைவி என்ற பொறுப்பு, பயணங்கள், தாய்மைப் பொறுப்பு... இப்படி. இது மிகவும் சவாலாக இருக்கிறது. அதே நேரம், மிகவும் நிறைவாகவும் இருக்கிறது.

உங்கள் மகன் ஜாக்கின் முதலாவது பிறந்த நாளை சமீபத்தில் சிறப்பாக கொண்டாடி இருக்கிறீர்களே..?

ஆமாம். நாங்கள் ஜாக்கை எங்கள் நண்பர் ஒருவரின் வீட்டில் நடத்தப்படும் நீச்சல் வகுப்புக்கு அனுப்புகிறோம். அங்கே நீச்சல் பழகும் சக குழந்தைகளுடன் ஜாக் தனது பிறந்தநாளைக் கொண்டாடினான். பிறந்த நாள் கேக், பலூன் அலங்காரம், வந்திருந்த அனைவருக்கும் மதிய விருந்து என்று அமர்க்களமாய் போனது. அந்த குழந்தைகளின் அம்மாக்களுக்கு நான் ஒரு சாம்பைன் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தேன். நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடினோம், ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு, சீண்டி, குழந்தைகளைப் போல விளையாடினோம்.