குகை கோவிலில் படப்பிடிப்பு நடத்தியபோது சாமி ஆடிய கதாநாயகி

‘பாண்டி முனி’ படத்தில் நடித்த கதாநாயகி மேகாலி அருள் வந்து சாமி ஆடினார்.

Update: 2018-08-07 09:49 GMT
தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை,’ ‘காதல் கொண்டேன்,’ ‘யாரடி நீ மோகினி’ ‘ திருவிளையாடல் ஆரம்பம்,’ ‘3’ ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம், ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ். இந்த பட நிறுவனம் இப்போது, ‘பாண்டி முனி’ என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது. கஸ்தூரிராஜா கதை- திரைக்கதை- வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.

படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற ஒரு மெய் சிலிர்க்கும் சம்பவம் பற்றி டைரக்டர் கஸ்தூரிராஜா கூறியதாவது:-

“பாண்டி முனி, ஒரு திகில் படம். சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை, இது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்றபோது, 700 வருடங்களுக்கு முந்திய ஒரு குகை கோவிலை பார்த்தோம். அந்த குகை கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. செருப்பு அணிந்து செல்லவும் அனுமதியில்லை. அதனால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.

சற்று தூரம் தள்ளி சென்று படப்பிடிப்பை தொடங்கியபோது, கதாநாயகிகளில் ஒருவரான மேகாலிக்கு அருள் வந்து சாமி ஆடினார். உடனே அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி, பரிகார பூஜை செய்தனர். அதன் பிறகே சாமியாட்டமும் நின்றது. படப்பிடிப்பையும் தொடர முடிந்தது” என்றார், கஸ்தூரிராஜா.

வேகமாக வளர்ந்து வரும் ‘பாண்டி முனி’ படத்தில், கதாநாயகனாக ஆசிப் என்ற மாடலும், நாயகிகளாக மேகாலி, ஜோதி ஆகிய 2 பேரும் அறிமுகமாகிறார்கள். சாயாஜி ஷின்டே, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மது அம்பட் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். 

மேலும் செய்திகள்