பாகிஸ்தானில் படத்துக்கு தடை நடிகை டாப்சி வருத்தம்

டாப்சி-ரிஷிகபூர் நடித்துள்ள இந்தி படம் ‘முல்க்’. இந்த படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்து உள்ளது.

Update: 2018-08-08 00:03 GMT
தீவிரவாதியாக மாறும் ஒரு இளைஞனால் குடும்பம் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர்.
அந்த குடும்பத்தினர் நாட்டுபற்று உள்ளவர்கள். குற்றமற்றவர்கள் என்று போராடும் கதாபாத்திரத்தில் டாப்சி நடித்துள்ளார். இந்த படத்தை பாகிஸ்தானில் வெளியிட அனுமதி கேட்டு அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் பாகிஸ்தானில் திரையிட அனுமதி மறுத்து விட்டனர். இதுபோல் ஏற்கனவே சில இந்தி படங்களுக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் படம் வெளியாகாதது வருத்தம் அளிக்கிறது என்று டாப்சி கூறியுள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான அனுபவ் சின்ஹா கூறும்போது, “இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி எடுத்துள்ள இந்த படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதித்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இரு தரப்பினரும் ஒன்று சேரக்கூடாது என்று அங்குள்ள தணிக்கை துறை நினைக்கிறதா?

நான் பாகிஸ்தான் ரசிகர்களிடம் கேட்டு கொள்வது என்னவென்றால் முல்க் படத்தை திருட்டுத்தனமாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பாருங்கள். நான் திருட்டுத்தனமாக படங்களை பார்ப்பதை எதிர்ப்பவன்தான். ஆனாலும் முல்க் படத்தை பாகிஸ்தான் ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இதை சொல்கிறேன். இந்த படத்தை அவர்கள் பார்ப்பதன்மூலம் அங்குள்ள தணிக்கை அதிகாரிகளின் சுயரூபம் தெரிய வரும்” என்றார்.

மேலும் செய்திகள்