சினிமா செய்திகள்
19-ந் தேதி பொதுக்குழு கூடுகிறது நடிகர் சங்க தேர்தல் தள்ளிவைப்பு?

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருக்கும் விஷால் பதவி காலம் அக்டோபர் மாதம் முடிவதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த தேர்தலில் தங்கள் அணி மீண்டும் போட்டியிடும் என்றும் அவர் அறிவித்து இருந்தார்.
விஷாலுக்கு எதிராக ராதாரவி கோஷ்டியினர் களத்தில் இறங்க தயாராகி வருகிறார்கள். கடந்த பொதுக்குழுவில் விஷால் செயல்பாடுகளை டி.ராஜேந்தர் கடுமையாக விமர்சித்தார். எனவே அவரை தலைவர் பதவிக்கு நிற்கும்படி அதிருப்தியாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். ஜே.கே.ரித்திசும் விஷாலுக்கு எதிராக தேர்தலில் நிற்கிறார்.

தேர்தலுக்கு முன்பு சென்னை தியாகராய நகர் அபுபுல்லா சாலையில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக உள்ள 19 கிரவுண்ட் இடத்தில் புதிய கட்டிடத்தை கட்டி முடித்து விட நிர்வாகிகள் திட்டமிட்டனர். ஆனால் வழக்குகள் காரணமாக கட்டுமான வேலைகள் தாமதமாக தொடங்கியதால் கட்டிட வேலைகள் முடிய மேலும் 7, 8 மாதங்கள்வரை ஆகலாம் என்று தெரிகிறது.

இதனால் நடிகர் சங்க தேர்தல் தள்ளிப்போகலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சங்கத்தில் 3 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் கட்டிட வேலையை முடித்து விட்டு தேர்தல் நடத்தலாம் என்று நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி வற்புறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 19-ந் தேதி பகல் 2 மணிக்கு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் தவறாது கலந்து கொள்ளும்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி உள்ளனர். பொதுக்குழுவில் தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா? என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது.