சினிமா செய்திகள்
கருணாநிதி மறைவுக்கு நடிகர்-நடிகைகள் இரங்கல்

கருணாநிதி மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர்-நடிகைகள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து கருத்துக்கள் பதிவு செய்துள்ளனர். அதன்விவரம் வருமாறு:-

பிரபு

எனது தந்தை சிவாஜி கணேசனுக்கும், கலைஞருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. அவரை கருணாநிதி என்று சொன்னால் அப்பா தலையில் அடிப்பார். அதனால் அவரை எப்போதும் பெரியப்பா என்றுதான் சொல்வோம். எப்படி சிவாஜி அப்பாவை இழந்தோமோ, அப்படி பெரியப்பாவையும் இழந்து நிற்கிறோம். அவர்கள் நம்முடன்தான் இருக்கிறார்கள்.

அமிதாப்பச்சன்

துடிப்பான தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல். சாத் இந்துஸ்தானி படத்துக்காக முதல்முறை தேசிய விருது எனக்கு கிடைத்தது. அதற்கான விழா சென்னையில் நடந்தது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் இருந்து அந்த விருதை வாங்கினேன்.

தனுஷ்

வஞ்சிக்கப்பட்ட தமிழனை சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே பராசக்தி மூலமாக அரசியலை அறிய வைத்து எங்களைப் போன்ற பாமரர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே, உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்.

விஜய் சேதுபதி

தமிழகம் இதுவரை கண்டிராத ஒரு ஈடு இணையற்ற போராளியின் மறைவை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இது பகைமை பாராட்டுவதற்கான தருணம் அல்ல. தமிழகத்தின் முதல்வராக 5 முறை தேர்வு செய்யப்பட்டவர் என்ற முறையிலும் தமிழுக்கும் மக்களுக்கும் அவர் வாழ்நாள் முழுவதும் சேவை செய்த தலைவர் என்ற வகையிலும் அவருக்கு மரியாதை செய்ய வேண்டும்.

ஏ.ஆர்.ரகுமான்

நீங்கள் இந்த பூமியை விட்டு மறைந்தாலும் தமிழ் மீதான உங்கள் அன்பும், வேட்கையும் எங்களிடம் எப்போதும் நிலைத்து இருக்கும். உங்களுக்கு ஆழ்ந்த மரியாதை.

சித்தார்த்

கடைசி தமிழ் மாமனிதன் வீழ்ந்து விட்டான். முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி ஒப்பற்ற மனிதர். தமிழகம் தனது உயர்ந்த அரசியல் ஆளுமையை இழந்துள்ளது. நமது அழகிய தமிழ் மொழி கருணாநிதியின் மறைவை உணரும். அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப பல காலமாகும்.

ஜீவா

மரணம் வாழ்க்கையில் ஓர் அங்கம் என்பதை சொல்லித்தந்தது உன் பகுத்தறிவு. பகுத்தறிவாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை உன் மரணத்தை. போய் வா தமிழே.

சூரி

சின்ன வயசுலேயே கலைஞர் ஐயாவோட போட்டோவை வீட்டில் வைச்சிருப்பார் எங்க அப்பா. உற்ற உறவாகவும், உண்மை தலைவராகவும் ஐயாவை மட்டும்தான் காட்டுவார். நிறைவான மரணம் என்றாலும் நெஞ்சடைக்குது.

ஜி.வி.பிரகாஷ்

கற்பனையில் மட்டுமே சாத்தியப்பட்டதை தனது வாழ்க்கையில் நிகழ்த்தி காட்டிய அரசியல் பெரும் தலைவர் கலைஞர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.

அனுஷ்கா

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். கலைக்கும், இலக்கியத்துக்கும், இந்திய அரசியலுக்கும் அவர் ஆற்றிய பங்கு என்றைக்கும் நினைவில் இருக்கும்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்

மக்களின் மனங்களை 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த உயர்ந்த தலைவர் மறைந்தது வருத்தத்தை தருகிறது. இரண்டு சூரிய அஸ்தமனங்களை நான் பார்க்கிறேன்.

கவுதமி

கலைஞரின் மறைவால் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறேன். தமிழக சரித்திரத்தில் அவருடைய இடம் தனித்துவமானது. சினிமா மற்றும் அரசியலில் ஈடுபட்ட ஏராளமானோர் அவரைத்தான் ஒரு உந்துதலாக எடுத்துக்கொண்டனர். கலைஞர் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஹன்சிகா

கலைஞர் கருணாநிதி மறைவு பற்றி கேள்வியுற்று ஆழ்ந்த துயருற்றேன். நமது நாடு பார்த்த சிறந்த தலைவர்களில் ஒருவர் அவர். அவரது இழப்பை தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தினருக்கும், தமிழர்களுக்கும் இறைவன் தர வேண்டும்.

திரிஷா

இன்னொரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் திரையுலகம் உண்மையாகவே உங்களை இழந்து நிற்கிறது.

காஜல் அகர்வால்

நமது முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி மறைவு செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவர் ஒரு சகாப்தம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபம்.

சமந்தா

6 தலைமுறைகளை கடந்த ஒரு சகாப்தம் முடிவடைந்துள்ளது. அவர் சாதனைகளை யாராலும் நிரப்ப முடியாது. அவர் என்றென்றும் நினைவில் இருப்பார்.

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்

தமிழ்தாய் தன் தலைமகனை இழந்து தவிக்கிறாள். தமிழகம் தன் தலைவனை இழந்து தவிக்கிறது. கண்ணீர் அஞ்சலி ஐயா.

டைரக்டர் வெங்கட் பிரபு

அவரின் தமிழ் பற்றுக்கு நிகர் அவர் மட்டுமே. என்றும் நம் மனதில் அஸ்தமிக்காத சூரியன்.