சினிமா செய்திகள்
ஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே நடிக்க `100 சதவீதம் காதல்'

100 சதவீதம் காதல் படத்தில் ஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே ஜோடியாக நடிக்கிறார்கள்.
நாகசைதன்யா-தமன்னா நடித்து ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற தெலுங்கு படம், `100 சதவீதம் லவ்.' இந்த படம் இப்போது, `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. ஜீ.வி.பிரகாஷ்-ஷாலினி பாண்டே ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்' விஜய், ஆர்.வி.உதயகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆர்.கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஜீ.வி.பிரகாசே இசையமைக்கிறார். சுகுமார் எழுதிய கதைக்கு, திரைக்கதை அமைத்து சந்திரமவுலி எம்.எம். டைரக்டு செய்கிறார். சுகுமார், புவனா, சந்திரமவுலி ஆகிய மூன்று பேரும் கூட்டாக தயாரிக்கிறார்கள்.

படத்தை பற்றி டைரக்டர் சந்திரமவுலி சொல்கிறார்:-

``கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் `ஈகோ' பிரச்சினைதான் கதையின் கரு. யார் முதல் மார்க் வாங்குவது? என்று இரண்டு பேருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது. அவர்களுக்கு இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து திரைக்கதையாக்கி இருக்கிறோம்.

படத்தில், இசை ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். பாடல்களுக்கு மிகுந்த சிரத்தை எடுத்து ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். அந்த பாடல்களை ஏவி.எம். ஸ்டூடியோவில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கியிருக்கிறோம். தெலுங்கு படத்தில் தமன்னா நடித்த கதாபாத்திரத்தை அவர் அளவுக்கு ஷாலினி பாண்டேவினால் திறமையாக நடிக்க முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது.

அந்த சந்தேகம் துளி கூட ஏற்படாத அளவுக்கு ஷாலினி பாண்டே மிக சிறப்பாக நடித்து இருக்கிறார். படத்தை அடுத்த மாதம் (செப்டம்பர்) திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.''