சினிமா செய்திகள்
ஆருஷி கொலை வழக்கு படத்தில் அஞ்சலி

நொய்டாவை சேர்ந்த பல் மருத்துவ தம்பதி ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வார் மகள் ஆருஷி.
ஆருஷி கடந்த 2008-ம் ஆண்டு அவருடையை படுக்கை அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் வேலை செய்த ஹேம்ராஜ் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் மறுநாள் வீட்டு மாடியில் ஹேம்ராஜ் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.

நொய்டா போலீசார் விசாரணை நடத்தியதில் ஆருஷியின் பெற்றோரே அவரை ஆணவ கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். வீட்டு வேலைக்காரர்கள், ராஜேஷ் தல்வாரின் நண்பர்கள் என்று மேலும் பலர் கைதானார்கள். பின்னர் இந்த வழக்கை  சி.பி.ஐ–க்கு மாற்றினர். இந்தியாவையே உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக போதிய ஆதாரம் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி கைதான அனைவரையும் கோர்ட்டு விடுதலை செய்தது.

இந்த கொலை வழக்கு திரைப்படமாக தயாராகிறது. இந்த படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராய் லட்சுமியும் இதில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஆருஷி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது. கொலை சம்பவத்தையும், சி.பி.ஐ. விசாரணையையும் மையப்படுத்தி இந்த படத்தை தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது.