சினிமா செய்திகள்
சண்டக்கோழி-2 படக்குழுவினர் 150 பேருக்கு தங்க காசு பரிசு வழங்கிய கீர்த்தி சுரேஷ்

தெலுங்கு, தமிழில் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்த பிறகு அவரது மார்க்கெட் மேலும் உயர்ந்தது. சண்டக்கோழி-2 படத்தில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தை லிங்குசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு இறுதிநாளில் கேக் வெட்டினார்கள். அப்போது துணை நடிகர்–நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் 150 பேருக்கு கீர்த்தி சுரேஷ் தலா 1 கிராம் தங்க காசுகள் பரிசு வழங்கினார்.

இதை எதிர்பார்க்காத படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். சண்டக்கோழி–2 கதை கீர்த்தி சுரேசுக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும், ஒவ்வொரு காட்சியிலும் ஈடுபாட்டுடன் நடித்தார் என்றும் அவரோடு சேர்ந்து நடித்தவர்கள் பாராட்டினர். ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதியும் இதுபோல் படக்குழுவினர் 100 பேருக்கு தங்க காசு பரிசு வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டக்கோழி-2 படத்தை விஷால் தயாரித்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடக்க உள்ளது. படம் அக்டோபர் 19-ந் தேதி ஆயுத பூஜைக்கு திரைக்கு வருகிறது.