இளம் ரசிகர்களின் அரவணைப்பில் விஜய் தேவரகொண்டா

தெலுங்கு சினிமாவில் இருக்கும் இளம் கதாநாயகர்களில், விஜய் தேவரகொண்டாவுக்கு இளம் ரசிகர்களின் ஆதரவு அதிகம்.

Update: 2018-08-11 10:39 GMT
2011-ம் ஆண்டு சினிமா உலகிற்குள் நுழைந்த விஜய் தேவரகொண்டாவின் தந்தை பெயர் தேவரகொண்டா கோவர்த்தன் ராவ். இவர் தெலுங்கில் சின்னத்திரை நடிகராகவும், விளம்பரப் படங்களின் இயக்குனராகவும் பணியாற்றியவர்.

கல்லூரி படிப்பை முடித்ததும், ஐதராபாத்தில் உள்ள பயிற்சிப் பட்டறை ஒன்றில் 4 மாதங்கள் நடிப்பு பயிற்சியில் ஈடுபட்டார் விஜய் தேவரகொண்டா. அதைத் தொடர்ந்து அவருக்கு 2011-ல் சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் அவர் நடித்தது துணை நடிகராகத்தான். புதுமுகங்களை வைத்து, ரவி பாபு இயக்கத்தில் உருவான படம் தான் ‘நுவ்விலா’. இந்தப் படத்தில் 6 புது முகங்களில் ஒருவராகத்தான் சினிமாத் துறைக்கு அறிமுகமானார் விஜய் தேவரகொண்டா. தொடர்ந்து, ‘லைப் இஸ் பியூட்டிபுல்’, நானி கதாநாயகனாக நடித்த ‘யவடே சுப்பிரமணியம்’ ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்தார்.

இதையடுத்து தருண் பாஸ்கர் தாஷ்யம் இயக்கத்தில் உருவான ‘பெல்லி சூப்லு’ என்ற படத்தில் கதாநாயகன் வாய்ப்பு கிடைத்தது. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்திருந்தார். வேலைக்குச் செல்லாமல், உயர்ந்த இடத்தில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார் விஜய் தேவரகொண்டா. இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிக அருமையாக கையாண்டிருந்தார். இதனால் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதை-வசனம் ஆகிய இரண்டு பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அத்துடன் கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே, ரசிகர்களிடத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு நல்ல பெயரையும் ஏற்படுத்தியப்படம் இது.

அடுத்ததாக 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான ‘துவாரகா’ படம் விஜய் தேவரகொண்டாவுக்கு எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. ஆனால் அந்த ஆண்டின் ஆகஸ்டு மாதத்தில் வெளியான ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படம் அதிரிபுதிரி வெற்றியைப் பெற்றுத் தந்தது. தெலுங்கு சினிமா என்றாலே, கமர்ஷியல் என்ற எண்ணத்தை மாற்றி அமைக்கும் படமாக இந்தப் படம் இருந்தது. கிட்டத்தட்ட இந்தப் படத்தை நவீன தேவதாஸ் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இயக்குனர் இந்தக் கதையை கையாண்ட விதமும், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராததைச் செய்யும் கதாபாத்திர உருவாக்கமும், அந்தப் படத்தை தெலுங்கு ரசிகர்களின் மனதிற்குள் சிம்மாசனம் போட்டு அமரச் செய்து விட்டது.

ஏற்கனவே ‘பெல்லி சூப்லு’ படத்தில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பை ரசிக்கத் தொடங்கியிருந்த, இளம் தெலுங்கு ரசிகர்கள் பலரையும், அவரது தீவிர ரசிகர்களாக மாற்றிய திரைப்படம் ‘அர்ஜூன் ரெட்டி’ என்றால் அது மிகையல்ல. கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், அதுவும் இரண்டே படங்களில் ஒருவரை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல.

அதே போல் இந்த ஆண்டு வெளியாகி, நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கையைப் பேசிய ‘மகா நடி’ படத்திலும் விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தில் சமந்தாவை காதலிக்கும் கதாபாத்திரத்தில் புகைப்பட கலைஞராக நடித்திருந்தார் விஜய் தேவரகொண்டா.

தற்போது அவர் ‘கீதா கோவிந்தம்’, ‘டாக்ஸிவாலா’, ‘நோட்டா’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘நோட்டா’ என்ற திரைப்படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிப் படமாக உருவாகி வருகிறது. இதன் மூலம் தமிழிலும் காதல்பதிக்கும் முனைப்பில் இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. ‘நோட்டா’ திரைப்படத்தின் பெயரே, இது ஒரு அரசியல் படம் என்பதைச் சொல்லும் வகையில் இருப்பதை உணரலாம். இந்தப் படத்தை ‘அரிமாநம்பி’, ‘இருமுகன்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.

மேற்கண்ட படங்களில் ‘கீதா கோவிந்தம்’ படம், காதல் படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். கன்னட நடிகையான இவரது 5-வது படம் இதுவாகும். ‘கீதா கோவிந்தம்’ படத்தின் ஒரு பாடல் வீடியோ சமீபத்தில் வெளியானது. இளமையும், காதலும், குறும்பும் ததும்பும் விதமாக உருவாகியிருக்கும் இந்தப் பாடல் காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வைரலாகி இருக்கும் இந்தப் பாடல் காட்சியின் மூலம், விஜய் தேவரகொண்டாவிற்கு இருக்கும் இளம் ரசிகர் பட்டாளத்தின் எண்ணிக்கை வெளிப்பட்டிருப்பதாக தெலுங்கு சினிமா உலகம் கூறுகிறது. வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கும் ‘கீதா கோவிந்தம்’ படமும், விஜய் தேவரகொண்டாவின் இளம் ரசிகர் படையால் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். 

மேலும் செய்திகள்