சினிமா செய்திகள்
நடிகர் பரத்துக்கு இரட்டை ஆண் குழந்தை

ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’சில் அறிமுகமாகி ‘காதல்’ படத்தில் பிரபலமானவர் பரத்.
செல்லமே, எம்மகன், வெயில், கூடல் நகர், பழனி, நேபாளி, கண்டேன் காதலை, யுவன்யுவதி, வானம், திருத்தணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பொட்டு, சிம்பா, காளிதாஸ், 8 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பரத்துக்கும் பல் மருத்துவரான ஜெஸ்லிக்கும் 2013-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் ஆகும். ஜெஸ்லி கர்ப்பமாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு ஜெஸ்லிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பரத் இதனை டுவிட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, “நான் இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறேன். இரண்டு இளவரசர்கள் பிறந்து இருக்கிறார்கள். தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்” என்றார்.

இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள தகவல் அறிந்து நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பரத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.