சினிமா செய்திகள்
மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்க்க ரகசிய வாக்கெடுப்பு

நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர்.
மலையாள நடிகர் சங்கத்தில் இருந்தும் திலீப் நீக்கப்பட்டார். 85 நாட்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள அவரை மீண்டும் சங்கத்தில் சேர்த்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

சங்கத்தில் புதிய தலைவராக பொறுப்பு ஏற்றுள்ள மோகன்லாலை நடிகைகள் கடுமையாக விமர்சித்தனர். ரம்யா நம்பிசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் பெண்கள் சினிமா கூட்டுக்குழுவும் திலீப் சேர்க்கப்பட்டதை கண்டித்தது.

இதற்கு விளக்கம் அளித்த மோகன்லால் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகவே சங்கம் இருக்கும் என்றும் நடிகர் சங்க பொதுக்குழுவில் ஒருமனதாக எடுத்த முடிவின்படியே திலீப் சங்கத்தில் சேர்க்கப்பட்டார் என்றும் கூறினார். கோர்ட்டில் நிரபராதி என்று நிரூபிக்கும்வரை சங்கத்தில் இருந்து திலீப் விலகியே இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பிரச்சினை குறித்து மலையாள நடிகர் சங்கத்தினர் திலீப்பை கடுமையாக எதிர்க்கும் ரேவதி, பத்மபிரியா, பார்வதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திலீப் குற்றவாளி இல்லை. எனவே அவரை சங்கத்தில் சேர்ப்பதை ஏன் எதிர்க்கிறீர்கள்? என்று கேட்டனர். ஆனாலும் நடிகைகள் அவரை சேர்க்க சம்மதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து நடிகர் சங்க கூட்டத்தை கூட்டி திலீப்பை சேர்க்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.