சினிமா செய்திகள்
விராட் கோலியாக நடிக்கும் துல்கர் சல்மான்

இந்திய கிரிக்கெட் அணி 2011-ல் உலக கோப்பையை வென்றது. அந்த நிகழ்வை மையமாக வைத்து ‘ஸோயா பேக்டர்’ என்ற பெயரில் புதிய இந்தி படம் தயாராகிறது.
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி வேடத்தில் மம்முட்டியின் மகனும், மலையாள நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, நடிகையர் திலகம் படங்களிலும் நடித்துள்ளார். இர்பான்கான், மிதிலா பால்கருடன் துல்கர் சல்மான் இந்தியில் நடித்துள்ள கன்மார் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இன்னொரு இந்தி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஸோயா பேக்டர் படத்தை அபிஷேக் சர்மா இயக்குகிறார். இவர் ஏற்கனவே தேரே பின்லேடன், த ஷாக்கீன்ஸ், பர்மனு ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். கதாநாயகியாக சோனம் கபூர் நடிக்கிறார். இவர் அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தில் வருகிறாரா? என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்த படம் விராட் கோலியின் முழுமையான வாழ்க்கை கதையாக இருக்காது என்றும் கிரிக்கெட் விளையாட்டில் அவர் நிகழ்த்திய சாதனைகளை மையப்படுத்தி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே டோனியின் வாழ்க்கை படமாக வந்தது. கபில்தேவ் வாழ்க்கையும் படமாகிறது. மேலும் சில கிரிக்கெட் வீரர்கள் வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.