சினிமா செய்திகள்
நடிகையை காரில் கடத்தியபோது எடுத்த வீடியோதிலீப்பிடம் கொடுக்க கோர்ட்டு மறுப்பு

நடிகையை காரில் கடத்தியபோது எடுத்த வீடியோவை வழங்க முடியாது என்று கோர்ட்டு மறுத்துவிட்டது.
கேரளாவில் நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பல்சர் சுனில் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது பல்சர் சுனில் நண்பர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக திலீப் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து திலீப்புக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பதாக போலீசார் கண்டுபிடித்தனர். 

இதைத்தொடர்ந்து திலீப்பும் கைது செய்யப்பட்டார். 85 நாட்கள் சிறையில் இருந்த அவர் இப்போது ஜாமீனில் வந்து இருக்கிறார். இந்த வழக்கில் போலீசார் கொச்சி ஐகோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. நடிகையை கடத்தி காரில் பாலியல் பலாத்காரம் செய்தபோது அதனை பல்சர் சுனிலும் அவனது நண்பர்களும் செல்போனில் படம் பிடித்து இருந்தனர்.

 அந்த வீடியோ காட்சியை ஆதாரமாக போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளனர். வீடியோவில் இருக்கும் காட்சிகள் என்ன என்பதை பார்க்க வேண்டும் என்றும் எனவே அதன் பிரதியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரி திலீப் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார். 

இந்த மனு மீது நீதிபதி விசாரணை நடத்தி வீடியோவை வழங்க முடியாது என்று உத்தரவிட்டார். வீடியோவை வழங்கினால் நடிகைக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்படும். அதை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே வீடியோவை திலீப்புக்கு தர முடியாது என்று நீதிபதி கூறினார்.