சினிமா செய்திகள்
‘‘தமிழ் படங்களில் நடிக்க ஆசை’’ –ஸ்ரீரெட்டி

தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி தமிழ் நடிகர்கள், இயக்குனர்களையும் அந்த பட்டியலில் சேர்த்தார். செக்ஸ் மிரட்டல் மூலம் ஸ்ரீரெட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் டைரக்டர் வாராகி சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் மனு கொடுக்க பதிலுக்கு ஸ்ரீரெட்டியும் வாராகி மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யும்படி மனு அளித்தார். 

இந்த புகார் மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றசாட்டில் சிக்கிய நடிகர் லாரன்ஸ் அதை மறுத்ததுடன் ஸ்ரீரெட்டி நடிப்பு திறமையை நிரூபித்தால் தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக அறிவித்தார். இதனால் நடிப்பை வெளிப்படுத்தும் வீடியோக்களை முகநூலில் ஸ்ரீரெட்டி வெளியிட்டார். 

லாரன்ஸ் நடிக்க அழைப்பாரா? என்பது தெரியவில்லை. இந்த நிலையில் ரசிகர்களுடன் முகநூலில் கலந்துரையாடிய ஸ்ரீரெட்டி அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

அப்போது அவர் கூறும்போது, ‘‘தெலுங்கில் இனிமேல் நடிக்க மாட்டேன். தமிழ் படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. தமிழில் வாய்ப்புகளும் வருகின்றன. ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுவேன் என்று எதிர்பார்க்கிறேன். எனக்கு நடிகர் அஜித்தை மிகவும் பிடிக்கும். விஜய் அழகான நடிகர். சூர்யாவும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களும் நல்லவர்கள். மலையாள நடிகர்களும் அழகாக இருக்கிறார்கள். கவர்ச்சியாகவும் உள்ளனர்’’ என்றார்.