சினிமா செய்திகள்
நவம்பர் 20–ந் தேதி தீபிகா படுகோனேவுக்கு திருமணம்?

தீபிகா படுகோனே-இந்தி நடிகர் ரன்வீர் சிங் திருமணம் நவம்பர் 20–ந் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபிகா படுகோனேவும், இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள். வெளிநாடுகளிலும் ஜோடியாக சுற்றுகிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் மேக்கப் போடாமல் சென்ற இருவரையும் இந்திய பெண் ஒருவர் அடையாளம் கண்டு வீடியோ எடுத்ததை தீபிகா படுகோனே கண்டித்து அந்த பெண்ணை தாக்கியதாகவும் தகவல்கள் வந்தன. 

தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் காதலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது. இப்போது திருமண தேதி வெளியாகி உள்ளது. 

நவம்பர் 20–ந் தேதி இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக இருவருக்கும் நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டு உள்ளனர். இத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியில்தான் திருமணம் நடந்தது. ஒருசிலரை அழைத்து எளிமையாக திருமணத்தை நடத்துகிறார்கள்.

மொத்தம் 30 பேரை மட்டுமே அழைத்து செல்கிறார்கள். குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். திருமணம் முடிந்து இந்தியா திரும்பிய பிறகு நடிகர்–நடிகைகளை அழைத்து மும்பையில் திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.