சினிமா செய்திகள்
வலைத்தளத்தில் திருட்டுத்தனமாகவிஜய் பட பாடல் காட்சி வெளியானது

‘சர்கார்’ படத்தில் விஜய் நடித்த பாடல் காட்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சர்கார்’ படத்தில் நடிக்கிறார் விஜய். துப்பாக்கி படத்துக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். இந்த படத்தின் முதல் தோற்றம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் இடம்பெற்று இருந்த விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் அந்த போஸ்டரை பட நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டனர்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் அமெரிக்கா சென்றனர். அங்குள்ள லாஸ்வேகாசில் விஜய் நடனமாடிய பாடல் காட்சியை படமாக்கினர். கருப்பு இன நடன கலைஞர்களும் இதில் பங்கேற்று ஆடினார்கள்.

அங்கு படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பி விட்டனர். இந்த நிலையில் லாஸ்வேகாசில் படமாக்கப்பட்ட ரா..ரா.. ரட்சசன் என்ற பாடல் காட்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதில் விஜய் நடனம் இளமை துள்ளலுடன் நன்றாக இருப்பதாக ரசிகர்களும் வைரலாக்கி வருகிறார்கள். 

இந்த பாடல் படத்துக்கு அறிமுக பாடலாக இருக்கலாம் என்று தெரிகிறது. பாடல் காட்சி வெளியானது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை திருட்டுத்தனமாக படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் கசிய விட்டது யார்? என்று ஏ.ஆர்.முருகதாஸ் விசாரணை நடத்தி வருகிறார்.