சினிமா செய்திகள்
தமிழில் தயாராகும் ‘பிங்க்’ இந்தி படம்அமிதாப்பச்சன் வேடத்தில் அஜித்குமார்

தமிழில் தயாராகும் படத்தில் அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில் அஜித்குமார் நடிப்பதாக கூறப்படுகிறது.
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் நயன்தாரா கதாநாயகியாக வருகிறார். தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோரும் உள்ளனர். இதில் அஜித்துக்கு வடசென்னை தாதா கதாபாத்திரம் என்றும் இரு வேடங்களில் அவர் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்துக்கு பிறகு வினோத் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. மூன்று இளம் பெண்கள் மீது போலீசார் பொய்யாக விபசார வழக்கு ஜோடித்து கைது செய்கின்றனர். 

அந்த பெண்கள் விலைமாது அல்ல என்று கோர்ட்டில் நிரூபித்து எப்படி விடுதலையாகிறார்கள் என்பதே பிங்க் படத்தின் கதை. இளம்பெண்களுக்காக கோர்ட்டில் வாதாடும் வக்கீலாக அமிதாப்பச்சன் நடித்து இருந்தார். கைதான பெண்களில் ஒருவராக டாப்சி நடித்து இருந்தார். இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. 

ஜனாதிபதி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டினர். பிங்க் படத்தில் சில மாற்றங்கள் செய்து தமிழில் எடுக்கின்றனர். அமிதாப்பச்சன் நடித்து இருந்த வக்கீல் வேடத்தில் அஜித்குமார் நடிப்பதாக கூறப்படுகிறது. பிங்க் படத்தின் ரீமேக் உரிமையை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் வாங்கி இருக்கிறார். அவரே தமிழில் தயாரிக்கிறார்.