சினிமா செய்திகள்
விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை படமாகிறது

மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகம் தயாராகின்றன. மறைந்த ஆந்திர முதல் மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய். ராஜசேகர ரெட்டி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்க்கை படமாகி வருகிறது. மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக விப்ரி மீடியா பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரி அறிவித்து உள்ளார். 

தேசிய அளவில் பிரசித்தி பெற்ற தலைவர்களில் முக்கியமானவராகவும் பெண்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்ந்த ஜெயலலிதா திரையுலகிலும் அரசியலிலும் நிகழ்த்திய சாதனைகளுக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறோம் என்று பட நிறுவனம் கூறி உள்ளது. இதே நிறுவனம்தான் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையையும் படமாக்கி வருகிறது. கபில்தேவ் வாழ்க்கையை அவர் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கவும் தயாரித்து வருகிறது. 

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை விஜய் டைரக்டு செய்கிறார். இவர் அஜித் நடித்த கிரீடம், ஆர்யாவின் மதராச பட்டணம், விக்ரம் நடித்த  தெய்வ திருமகள், தாண்டவம், விஜய் நடித்த தலைவா, ஜெயம்ரவியின் வனமகன் உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்தவர். ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்துக்கு திரைக்கதை அமைக்கும் வேலையில் அவர் ஈடுபட்டுள்ளார். 

ஜெயலிலதா பிறந்த நாளான பிப்ரவரி 24–ந்தேதி இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. அன்றைய தினமே படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிடுகின்றனர். இந்த படத்தில் நடிக்க கதாநாயகிகள் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. திரிஷா, மஞ்சிமா மோகன் ஆகியோர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க விரும்புவதாக ஏற்கனவே அறிவித்து உள்ளனர்.  நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், வித்யாபாலன் ஆகியோரும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவின் முக்கியமான நடிகர்களும் இந்தி நடிகர்களும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.