எதிர்பார்ப்பின் உச்சத்தில் ‘காயம்குளம் கொச்சுண்ணி’

வரலாறு பதிவு செய்த உண்மைகளையும், வாழ்க்கை பிரதிபலிக்கும் உண்மைகளையும் அதிரடி சண்டை, அதிக கற்பனை என்ற கலவை இல்லாமல், யதார்த்தத்தின் பக்கம் நின்று படம் பிடிப்பதாலோ என்னவோ, மலையாள சினிமா பலரின் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

Update: 2018-08-18 10:56 GMT
இன்றைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை யதார்த்தத்தின் பக்கம் நின்று சொல்லும் அதே வேளையில், வரலாறு பதிவு செய்பவர் களையும், வரலாற்றில் தன் தடத்தை பதித்துக் கொண்டவர்களையும் படம் பிடித்துக் காட்டுவதில் இந்திய அளவில் மலையாள சினிமாத் துறைக்கு முக்கிய இடமுண்டு.

அப்படி தன்னுடைய கால்தடத்தை வரலாற்றில் பதிவு செய்த ஒருவனின் கதைதான் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என்ற திரைப்படமாக உருவாகி இருக்கிறது. 19-ம் நூற்றாண்டில் கேரளா மாநிலம் காயம்குளம் என்ற பகுதியில் வாழ்ந்த ‘கொச்சுண்ணி’ என்ற கொள்ளையனின் வாழ்க்கையை மையப் படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தவரிடம் இருக்கும் பொன்னையும், பொருளையும் அபகரித்துச் செல்பவனை எப்படி ‘வரலாற்றின் தடம் பதித்தவன்’ என்று பெருமைபடுத்திக் கூறமுடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் அவன் கொள்ளையனாக இருந்ததற்காக மட்டுமே வரலாறு அவனை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த காலகட்டத்தில் நம்மை அடக்கி ஆண்டு கொண்டிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகவும், மதம் என்ற பெயரில் தங்களுக்கு சாதகமாக சிலவற்றை எழுதி வைத்து, மக்களிடையே உயர்வு, தாழ்வு பிரிவினையை உண்டாக்கி, ஒருதரப்பு மக்களை ஒடுக்கி ஆண்டவர்களுக்கு எதிராகவும் போராடியதால் தான், அந்தக் கொள்ளையனை வரலாறு தன்னோடு பதிவு செய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் வெளியான ‘காயம்குளம் கொச்சுண்ணி’ திரைப்படத்தின் டீசரின் மூலமாக இதை அறிய முடிகிறது.

கி.பி.1830 காலகட்டத்தில் நடப்பது போல் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘காயம்குளம் கொச்சுண்ணி’ திரைப்படம் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுவிட்டது.

அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.. இந்தப் படத்தில் கொச்சுண்ணி என்ற கதாபாத்திரத்தில் ‘பிரேமம்’ படம் மூலமாக பிரபலமான நிவின்பாலி நடிக்கிறார். இந்தப் படத்தை ‘உதயநாணு தாரம்’, ‘நோட்புக்’, ‘மும்பை போலீஸ்’, ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ (தமிழில் 36 வயதினிலே) ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். மேலும் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய பல படங்களுக்கு திரைக்கதை அமைத்த பாபி-சஞ்சய் தான் இந்தப் படத்திற்கும் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இப்படி கதையாலும், தொழில்நுட்ப கலைஞர்களாலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்த ‘காயம்குளம் கொச்சுண்ணி’ திரைப் படத்தில், மலையாளத்தின் உச்ச நடிகரான மோகன்லால் இணைவதாக வெளியான தகவலால் பரபரப்பு பற்றிக்கொண்டது. தொடர்ந்து இப்படத்தில் மோகன்லாலின் தோற்றம் குறித்த ‘ஸ்டில்’ வெளியானது. அதற்கு கிடைத்த வரவேற்பு, ‘காயம்குளம் கொச்சுண்ணி’ திரைப்படக் குழுவினருக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. ஆரம்பத்தில் 15 நிமிடம் வருவதாக இருந்த மோகன்லால் கதாபாத்திரத்தை, 40 நிமிடம் திரையில் வரும்படி திரைக்கதையில் திருத்தம் செய்தனர். இதிகரா பக்கி என்ற கொள்ளையன் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருக்கிறார். அதுவும் நிவின்பாலிக்கு பயிற்சி அளிக்கும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் டீசரில் வரும் காட்சியும் இதை உறுதிபடுத்து வதாக இருக்கிறது.

கடந்த மாதம் வெளியான இந்தப் படத்தின் டீசர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. டீசரில் வரும் காட்சிகளும், வசனங்களும் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கின்றன. அறிவிப்பு வெளியானது முதல், இது ஒரு பொன், பொருளை அபகரிப்பவனின் கதை மட்டுமே என்பதாக இருந்த ரசிகர்களின் பார்வையை, சமீபத்தில் வெளியான ‘காயம்குளம் கொச்சுண்ணி’ படத்தின் டீசர் ‘ஆங்கிலேயருக்கு எதிராகவும், மதத்தால் பிறரை ஒடுக்குபவர்களுக்கு எதிராகவும் போராடும் ஒரு கொள்ளையனின் கதை’ என்ற வேறு ஒரு கோணத்திற்கு திருப்பி யிருக்கிறது.

தான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதை களத்தை கையில் எடுப்பவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். தன்னுடைய முதல் படமான ‘உதயநாணு தாரம்’ படத்தில் சினிமாவையும், ‘மும்பை போலீஸ்’ படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் ரகசிய வாழ்க்கையை திரில்லராகவும், ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தில் மத்திம வயது பெண்ணின் வாழ்க்கையையும் சொன்னவர். அந்த வரிசையில் கேரளா மாநிலத்தில் ஒரு காலத்தில் அன்பான, அதே நேரம் பயங்கரமான கொள்ளையனாகவும் வலம் வந்த ஒருவனின் கதையை ‘காயம்குளம் கொச்சுண்ணி’ திரைப்படத்தில் கையாண்டிருக்கிறார். எனவே இந்தப் படமும், மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று மலையாள திரைத் துறையினர் கணித்திருக்கிறார்கள்.

உச்சநடிகர் மோகன்லால், இளம் ரசிகர்களின் ஆதரவு பெற்ற நிவின்பாலி போன்றோர் நடிப்பதாலும், சிறந்த திரைக்கதை அமைப்பாளர்களான பாபி- சஞ்சய், முன்னணி இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் ஆகியோரது வெற்றிக்கூட்டணியின் நம்பிக்கையாலும், ரசிகர்களிடையே ‘காயம்குளம் கொச்சுண்ணி’ படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஆனால் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக சொல்லப்படும் இந்தப்படம், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்