சில நிமிடங்களில் வெள்ள நீர் கிடுகிடுவென உயர்ந்து விட்டது - மீட்கபட்ட நடிகை அனன்யா

சில நிமிடங்களில் வெள்ள நீர் கிடுகிடுவென உயர்ந்து விட்டது சிக்கி கொண்டு மீட்கப்பட்ட நடிகை அனன்யா கூறி உள்ளார்.

Update: 2018-08-18 11:34 GMT
திருவனந்தபுரம்

கேரளாவில் பருவமழை மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது.  கடந்த 10 நாட்களுக்கு மேலாக 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை அங்கு பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தில் 13 மாவட்டங்கள் வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி, மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

 மழை வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர், ஏராளமானோரைக் காணவில்லை. 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடு, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 324 பேர் வெள்ளத்துக்குப் பலியாகி இருக்கிறார்கள், ஏராளமானோரைக் காணவில்லை. 

இந்த வெள்ளத்துக்கு கேரள நடிகர், நடிகைகளும் தப்பவில்லை. கடந்த சில நாட்களுக்குமுன் நடிகர் பிரிதிவிராஜின் வீட்டுக்குள் வெள்ளம் சென்றதையடுத்து, மீட்புப் படையினர் அவரின் வீட்டுக்குள் சென்று அவரின் தாயைப் பாதுகாப்பாக மீட்டனர். நடிகர் ஜெயராமும் அவரின் குடும்பத்தினரும் காரில் நேற்றுமுன்தினம் சென்ற போது, நிலச்சரிவில் சிக்கினார்கள். பின்னர் இந்தத் தகவல் அறிந்து மீட்புப் படையினர் வந்து அவர்களை மீட்டனர்.

இந்நிலையில் நடிகை அனன்யாவும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். கொச்சியில் வசித்து வரும் அனன்யாவின் வீட்டை வெள்ள நீர் சூழ்ந்தது. கடந்த 2 நாட்களாக வெள்ள நீரில் சிக்கித் தவித்த அவரை மீட்டுப் படையினர் மீட்டு பெரம்பாவூரில் உள்ள நடிகை ஆஷா சரத்தின் வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.

அனன்யா பேஸ்புக் வீடியோ மூலம் தனக்கு நேர்ந்த கதியைத் தெரிவித்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

''கடந்த 2 நாட்களாக மழையில் சிக்கி நாங்கள் பட்ட துன்பத்தைச் சொல்ல இயலாது. எங்கள் வீடு முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டது.

அதன்பின் மீட்டுப் படையினர் மூலம் மீட்கப்பட்டு, வெள்ளிக்கிழமை காலையில்தான் பாதுகாப்பாக பெரம்பாவூரில் உள்ள நடிகை ஆஷா சரத்தின் வீட்டுக்கு வந்தோம். கடந்த 2 நாட்களாக மிகவும் மோசமான சூழலில் சிக்கி இருந்தோம். சில நிமிடங்களில் வெள்ள நீர் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. என்னுடைய உறவினர்கள் அனைவரின் வீடும் வெள்ள நீரில் சிக்கி இருக்கிறது.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என எங்களுக்குத் தெரியாது. அனைத்தும் கடவுள் கையில்தான் இருக்கிறது. இன்னும் மழை பெய்து கொண்டு இருக்கிறது. மிகவும் மோசமான அனுபவத்தை மக்கள் சந்தித்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமானோர் உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்கள். பெரம்பாவூரிலும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. ஏராளமானோர் வீடுகளை இழந்திருக்கிறார்கள். எங்களை வெள்ளத்தில் இருந்து மீட்ட அனைவருக்கும் நன்றி.'' இவ்வாறு நடிகை அனன்யா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்