சினிமா செய்திகள்
நிலச்சரிவில் காருடன் சிக்கி “18 மணி நேரம் குடும்பத்துடன் தவித்தேன்” -நடிகர் ஜெயராம்

நிலச்சரிவில் காருடன் சிக்கி “18 மணி நேரம் குடும்பத்துடன் தவித்தேன்” -நடிகர் ஜெயராம்
கேரள மழை வெள்ளத்தில் நடிகர்-நடிகைகளும் சிக்கினார்கள். திருவனந்தபுரத்தில் உள்ள நடிகர் பிருதிவிராஜ் வீட்டில் வெள்ளம் புகுந்தது. வீட்டில் இருந்த பிருதிவிராஜ் தாயார் மல்லிகா சுகுமாரனை பெரிய வெண்கல பாத்திர மிதவையில் வைத்து மீட்டனர்.

நடிகை அனன்யாவின் வீடும் வெள்ளத்தில் மூழ்கியது. அவரை மீட்டு பெரும்பாவூரில் உள்ள நடிகை ஆஷாசரத் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

ஆதாமின்டே மகன் படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சலீம்குமார் வீட்டின் முதல் மாடி வரை தண்ணீர் புகுந்ததால் மொட்டை மாடியில் தவித்தார். அவரையும் பேரிடர் குழுவினர் மீட்டனர்.

நடிகர் ஜெயராம் தனது மனைவி, மகளுடன் காரில் சென்றபோது உயரத்தில் இருந்து மண்ணும், கற்களும் சரிந்து சாலையை மூடியது. இதில் கார், லாரி, வேன் போன்ற வாகனங்கள் சிக்கிக் கொண்டன. அதில் ஜெயராம் வாகனமும் சிக்கி காரிலேயே பல மணி நேரம் தவித்தார். போலீசார் அவர்களை மீட்டனர்.

நிலச்சரிவில் சிக்கித் தவித்த அனுபவம் குறித்து ஜெயராம் கூறியதாவது:-

“நானும் எனது மனைவி, மகளும் நிலச்சரிவில் சிக்கியது மிகவும் கொடூரமான அனுபவம். 18 மணிநேரம் அவதிப்பட்டோம். போலீசார் வந்து எங்களை பத்திரமாக மீட்டனர். மூன்று நாட்கள் போலீஸ் குடியிருப்பில்தான் தங்கி இருந்தோம். இதற்காக காவல் துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது முகாம்களில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக உணவுப்பொருட்களுடன் செல்கிறேன்.

குழந்தைகளுக்கு தேவையான பால் பொருட்கள், மருந்துகள், நாப்கின் அதிகம் தேவைப்படுகிறது. உதவி செய்பவர்கள் அவற்றை கொடுங்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.