சினிமா செய்திகள்
‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில்கவிஞர் வைரமுத்துவின் கவிதை பாடலானது

கவிஞர் வைரமுத்துவின் கவிதை ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் பாடலானது.
மணிரத்னம் டைரக்டு செய்யும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில், மொத்தம் 7 பாடல்கள். கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ் மிக்க கவிதை தொகுதிகளில் ஒன்று, ‘பெய்யெனப் பெய்யும் மழை.’ அந்நாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதிதான் அந்த நூலை வெளியிட்டு வைரமுத்துவுக்கு, ‘கவிப்பேரரசு’ பட்டம் வழங்கினார். அந்த கவிதை தொகுதியில் இருந்து கதைக்குப் பொருத்தமான கவிதைகள் இரண்டை மணிரத்னம் தேர்ந்தெடுத்து கொடுக்க-ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, பாட்டை கேட்டதும் பரவசம் அடைந்தனர், படக்குழுவினர்.

அதில் ஒன்றுதான், ‘மழைக்குருவி’ என்ற புகழ் பெற்ற கவிதை. அந்த கவிதை வரிகள் வருமாறு:-

நீல மலைச்சாரல்- தென்றல் நெசவு நடத்துமிடம்

ஆல மரக்கிளைமேல் - மேகம் அடிக்கடி தங்குமிடம்

வானம் குனிவதையும் - மண்ணை வளைந்து தொடுவதையும்

காணும் பொழுதிலெல்லாம் - ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்

சிட்டுக் குருவியொன்று சிநேகப் பார்வை கொண்டு

வட்டப் பாறையின்மேல் - என்னை வாவென்றழைத்தது காண்

அலகை அசைத்தபடி - அது ஆகாயம் கொத்தியதே

உலகை உதறிவிட்டுச் - சற்றே உயரப் பறந்ததுவே

கீச்சுக் கீச்சென்றது - என்னைக் கிட்ட வாவென்றது

பேச்சு மொழியின்றியே - என்மேல் பிரியமா என்றது

வானம் தாழ்திறந்து - இந்த மண்ணில் வீழ்ந்ததென்ன

காணும் திசைகளெல்லாம் - மழையில் கரைந்து போனதென்ன

மின்னல் பறிக்குதென்று - சாரல் வீட்டில் தெறிக்குதென்று

ஜன்னல் அடைத்து வைத்தாள் - மனைவி தலையும் துவட்டிவிட்டாள்

பெய்யோ பெய்யென்று - மழை பெய்தால் என்ன செய்யும்

அய்யோ பாவமென்று - குருவி அழுவதை நினைத்திருந்தேன்

காட்டில் அந்நேரம் - நிகழ்ந்த கதையே வேறு கதை

கூட்டை மறந்துவிட்டுக் - குருவி கும்மியடித்தது காண்

சொட்டும் மழை சிந்தும் - அந்த சுகத்தில் நனையாமல்

எட்டிப் போனவனை - அது எண்ணி அழுதது காண்.