சினிமா செய்திகள்
வெள்ள பாதிப்புக்கு உதவ திருமணத்தை நிறுத்திய நடிகர்

விஜய்யுடன் ‘தலைவா,’ விஷாலுடன் ‘ஆம்பள’ மற்றும் ‘அவியல்,’ ‘7 நாட்களில்’ ஆகிய படங்களில் நடித்துள்ளவர் ராஜீவ் பிள்ளை.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். இப்போது கவர்ச்சி நடிகை ‌ஷகிலா வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் கேரளாவில் உள்ள நன்னூரில் வசித்து வந்தார். ராஜீவ் பிள்ளைக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது. 4 நாட்களுக்கு முன்னால் இவரது திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக நடிகர்–நடிகைகள், உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து இருந்தார். ஆனால் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தனது திருமணத்தை அவர் நிறுத்திவிட்டார்.

சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு நண்பர்களுடன் தண்ணீரில் இறங்கி சென்று உணவு, உடைகள் வழங்கி உதவி வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது திருமணத்தை விட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதுதான் முக்கியம். அதனால்தான் திருமணத்தை தள்ளி வைத்துவிட்டேன்.

எனது வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி விட்டன. 48 மணிநேரம் வெள்ளத்திலேயே நின்று அங்குள்ள மக்களை மீட்டு நிவாரண உதவிகள் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். மருத்துவ உதவிகளும் அளிக்கப்படுகின்றன’’ என்றார்.

திருமணத்தை நிறுத்தி வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடும் ராஜீவ் பிள்ளையின் படங்களை அவருடன் ‌ஷகிலா படத்தில் நடிக்கும் ரிச்சாசதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டி இருக்கிறார்.