சினிமா செய்திகள்
ரஜினியின் ‘2.0’ படக்காட்சிகள் வெளியானது

‘2.0’ படத்தில் ரஜினிகாந்தும் எமிஜாக்சனும் நடித்த சில காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
2010–ல் திரைக்கு வந்த ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி இந்தப் படம் உள்ளது. அக்‌ஷய்குமார் வில்லனாக வருகிறார். ‌ஷங்கர் இயக்கி உள்ளார். ரூ.450 கோடி செலவில் தயாரித்துள்ளனர்.

கடந்த வருடம் துபாயில் பாடல்களை வெளியிட்டனர். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியாததால் இரண்டு மூன்று முறை ரிலீஸ் தேதியை அறிவித்தும் திட்டமிட்டபடி திரைக்கு  கொண்டு வர முடியவில்லை. இறுதியாக நவம்பர் 29–ந்தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.

ஆனாலும் கிராபிக்ஸ் வேலைகள் தாமதமாவதால் மேலும் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என்றும் பேசப்படுகிறது. ரசிகர்களை உற்சாகப்படுத்த அவ்வப்போது இந்தப் படம் தயாரான வீடியோ காட்சிகளை படக்குழுவினர் வெளியிடுகின்றனர். ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட வீடியோ ஏற்கனவே வந்தது.

இப்போது எந்திரனாக நடிக்கும் ரஜினிகாந்த் ஸ்டைலாக நடந்து வருவது போன்றும் பாடல் காட்சியில் எமிஜாக்சன் நடன குழுவினருடன் இணைந்து ஆடுவது போன்றும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு உள்ளனர். இந்த காட்சிகள் பிரமாண்டமாக  இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு 2.0 படக்காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியானது. லண்டனில் உள்ள ஸ்டுடியோவில் கிராபிக்ஸ் பணிகள் நடந்தபோது யாரோ திருடி வெளியிட்டு விட்டதாக கூறப்பட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். இப்போது பலத்த பாதுகாப்புடன் கிராபிக்ஸ் பணிகள் நடக்கின்றன.